விளையாட்டில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு வீரர் வீராங்கனைக்கும் ‘ஒலிம்பிக்’ பெருங்கனவுதான் முதற்கனவாக இருக்கும். ஆனால், இவருக்கோ குடும்ப வறுமையை போக்கவும், வீட்டுச் சூழலை சீர் செய்யவும், தனக்கென ஒரு வேலையை உறுதிப்படுத்தி கொள்ளவும்தான் முதன் முதலில் நீளம் தாண்டினார். இன்று, இரண்டாவது முறையாக ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிற்கும் சொந்த ஊருக்கும் பெருமை சேர்ந்துள்ளார்.






திருச்சி லால்குடிதான் ஆரோக்கிய ராஜீவுக்கு சொந்த ஊர். லால்குடி அரசு ஆண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், செயிண்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆரோக்கிய ராஜீவின் தம்பி நீளம் தாண்டும் வீரர், தங்கை கைப்பந்து வீராங்கனை என குடும்பமே விளையாட்டை நேசிப்பவர்கள்.



சொந்த ஊரில் இருந்த குடிசை வீடு இடிந்து போக, பக்கத்து கிராமத்திற்கு குடிப்பெயர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வந்தார் ஆரோக்கிய ராஜீவ். அரசு பள்ளியில் படித்தபோது சத்துணவு சாப்பிட்டு விளையாட்டு பயிற்சி எடுத்துக்கொண்டார். பள்ளி அளவில், மாவட்ட அளவில் என படிப்படியாக நீளம் தாண்டுதல் விளையாட்டில் பதக்கங்களை அள்ளி குவித்த ராஜீவுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ராணுவத்தில் வேலை கிடைத்தது.


ராணுவத்தில் சேர்ந்த பிறகும் விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த அவர், நீளம் தாண்டுதலில் இருந்து ஓட்டப்பந்தய போட்டிகளில் விளையாட தொடங்கினார். இந்திய ராணுவத்திற்கான மதாராஸ் ரெஜிமெண்ட் சென்டரில் சுபேதராக பணியாற்றிய ராம்குமார் என்பவரின் தூண்டுதலில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.



இரண்டு வருடம் ராணுவப்படை தளத்தில் பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார். ஆனால், கால் தசை பிடிப்பு, தொடை தசை விலகல் என அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் பாதிப்புகளால் முக்கியமான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை மிஸ் செய்தார்.


எனினும், விடாத முயற்சியையும் தீவிரமான பயிற்சியையும் தொடர்ந்த ஆரோக்கிய ராஜீவ், 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.


இந்த தொடரில் பதக்கம் வென்றது முதல், இந்திய தடகளத்தில் கவனிக்கத்தக்க வீரராக உருவான ராஜீவ், அடுத்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு தொடர், 2017-ம் ஆண்டு நடைபெற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்தார்.



ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்ட குழுவில் ஆரோக்கிய ராஜீவ் தவிர்க்க முடியாத வீரராக தனக்கான இடத்தை பிடித்தார். விளைவு, 2016 ரியோ ஒலிம்பிக் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வான இந்திய அணியில் ராஜீவும் இடம் பிடித்திருந்தார்.


2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அடுத்த ஆண்டு, அர்ஜூனா விருது ஆரோக்கிய ராஜீவின் கைகளில் தவழ்ந்தது. உத்வேகம் கொண்ட ராஜீவ், தொடர்ந்து தனது பயிற்சியை மெருகேற்றிக் கொண்டார். இப்போது டோக்கியோவுக்கு பயணப்படும் ராஜீவ், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.


லால்குடியில் தொடங்கிய ஓட்டம் டோக்கியோவில் பதக்கம் வென்று வெற்றியுடன் திரும்பட்டும்! வாழ்த்துகள் ராஜீவ்!