டோக்கியோ தடகள போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் 400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளனர். அவர்களில் தனலட்சுமி யார்? எப்படி தடகளத்திற்குள் வந்தார்? 


திருச்சிக்கு அருகே உள்ள குண்டூர் கிராமத்தில் பிறந்தவர் தனலட்சமி. இவருடைய சிறு வயதிலேயே தந்தையை இவர் இழந்தார். இதனால் இவருடைய தாய் கூலி வேலைகள் செய்து தனலட்சுமி மற்றும் அவருடைய தங்கைகளையும் வளர்த்துள்ளார். வறுமையில் வாடிய தனலட்சுமி முன்னேற்றத்திற்கு விளையாட்டையே ஒரு கருவியாக பார்த்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை மங்களூரில் உள்ள அலுவா கல்லூரியில் படித்தார். அங்கு இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் உதவி தொகை கிடைத்துள்ளது. இதை வைத்து தனது குடும்பத்திற்கு செலவு செய்துள்ளார். 


கோகோவிலிருந்து ஓட்டப்பந்தயம்:


இந்த கல்லூரியில் பயின்ற போது கோ-கோ விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளார். அந்த சமயத்தில் இவருடைய ஓட்டத்தை பார்த்த தடகள பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம் தனலட்சுமியை தடகளத்தில் முயற்சி செய்ய அறிவுரை வழங்கியுள்ளார். மணிகண்டன் தடகள போட்டிகளில் பங்கேற்று கொண்டு பயிற்சியளித்து வருகிறார். அத்துடன் இவர் தனலட்சுமிக்கு பயிற்சி அளித்துள்ளார். அவருக்கு தேவையான உணவுகள் வாங்கவும் உதவி அளித்துள்ளார். 




ஓராண்டு பயிற்சியில் சிறப்பாக ஓடிய தனலட்சுமி பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான போட்டியில் 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.  கொரோனா லாக்டவுன் இவரது பயிற்சி மற்றும் வாழ்க்கையில் பெரிய இடியாக அமைந்தது. ஏனென்றால் திடீரென இவருடைய சகோதரி நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் சற்று மனம் உடைந்த தனலட்சுமிக்கு இவருடைய பயிற்சியாளராக இருந்த மணிகண்ட ஆறுமுகம் ஆறுதல் அளித்துள்ளார். 


முதல் வெற்றி: 


இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பட்டியாலாவில் நடைபெற்ற 24ஆவது பெட்ரேஷன் கோப்பை தடகள போட்டியில் தனலட்சுமி மன உறுதியுடன் களமிறங்கினார். அதில் 200 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரிவில் இவர் பங்கேற்றார். இரண்டிலும் சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்தியை 100 மீட்டர் பிரிவில் 11.38 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். அத்துடன் இந்தியாவின் வேகமான பெண்மணியான டூட்டி சந்த்-தை தோற்கடித்தார். டூட்டி சந்த் 11.58 விநாடிகளில் ஓடியிருந்தார். அவரை தோற்கடித்து தனலட்சுமி வெளிச்சம் பெற்றார். 


 






அதன்பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு 200 மீட்டர் பிரிவில் ஓடிய தன்லட்சுமி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஹீமா தாஸ் உடன் களமிறங்கினார். இந்த பிரிவை ஹீமா தாஸ் எளிதாக வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் 23.26 விநாடிகளில் கடந்து பெட்ரேஷன் கோப்பை போட்டியில் புதிய சாதனை படைத்தார். 1998ஆம் ஆண்டு இந்தப் போட்டியில் பிடி உஷா 23.30 விநாடிகளில் 200 மீட்டரை கடந்து சாதனைப் படைத்திருந்தார். இதை 23 ஆண்டுகளுக்கு பிறகு 22 வயதான தனலட்சுமி முறியடித்து அசத்தினார். மூன்று நாட்களில் இந்தியாவின் இரண்டு பெரிய தடகள நட்சத்திரங்களை வென்று அசத்தியிருந்தார். 


டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பு:


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்திய கலப்பு ரிலே அணி ஆசிய போட்டிகளில் வெள்ளி வென்று தகுதி பெற்றது. இந்த அணியில் இடம்பெற்று இருந்த ஹீமா தாஸ் மற்றும் எம்.ஆர்.பூவம்மா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டோக்கியோ செல்லும் இந்திய அணிக்கான வீராங்கனைகளை தேர்வு செய்ய சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் 400 மீட்டர் தூரத்தை ரேவதி (53.55), வி.சுபா (54.26), தனலட்சுமி (54.27) கடந்தனர். இதனால் தனலட்சுமி டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெற்றார். 




டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு ஒரு அரசாங்க வேலை பெற்றால் தன்னுடைய குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். அவருடைய எண்ணம் விரைவில் வெற்றி அடைய நாமும் வாழ்த்துவோம். 



மேலும் படிக்க:  Mary Kom | தடைகளை தகர்த்தெறிந்த மேரி கோம் - உலகம் வியந்த வீராங்கனையின் கதை !