டோக்கியோவில் நடைபெற்றும் வரும் பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில்  வினோத் குமார் பெற்ற வெண்கலப்பதக்கம் திரும்ப பெறப்பட்டது. 


நேற்று, நடைபெற்ற பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில்  வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரான வினோத், தனது முதல்வைப்பில் 17.46 மீ., தூரம் எறிந்தார். அதுத்த மூன்று வாய்ப்புகளில் 18.32, 17.80, எறிந்தார்.  நான்காவது சுற்றில் 19 மீ தூரத்தை எட்டிய அவர், ஐந்தாவது சுற்றில் 19.91 மீ தூரத்தையும், ஆறாவது சுற்றில் 19.81 மீ தூரத்தையும் அடைந்தார். இதையொட்டி,  ஆட்டத்தில் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 



 


இருப்பினும், F52 பிரிவு வட்டு எறிதல் தொடர்பாக சர்ச்சை எழ, பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரம், பாராலிம்பிக்ஸ் தொழிநுட்பக் குழுவுக்கு சென்றது. இந்நிலையில், இன்று மாலை வினோத் குமாருக்கு பதக்கம் வழங்குவது தொடர்பான முடிவு அறிவிக்கப்பட்டது. 


 F52 பிரிவில் வினோத் குமார் பங்குபெற தகுதி பெறவில்லை.  போட்டி முடிவுகள் கைவிடப்படுகிறது. வெண்கலப் பதக்கம் திரும்பப்பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.                 


F52 பிரிவின் கீழ் தசை பலவீனம், மூட்டு குறைபாடு, முள்ளந்தண்டு வடம் பாதிப்புறல், உறுப்பு நீக்கம், செயல்பாட்டுக் கோளாறு, முதுகெலும்பு காயம் கொண்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.


இந்நிலையில், F52 பிரிவில் வினோத குமார் பங்கேற்க தகுதி பெறவில்லை (Classification not completed) என பாராலிம்பிக்ஸ் தொழிநுட்பக் குழு அறிவித்துள்ளது.   


முன்னதாக, வினோத் குமார் வெற்றி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘‘அற்புதமான செயல்பாட்டுக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறது! வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது கடின உழைப்பு மற்றும் உறுதி, சிறந்த முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளார். #Paralympics’’ என்று தெரிவித்தார்.


வினோத் குமார்: 


இதைத் தொடர்ந்து வினோத் குமாரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.  ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) பணிபுரிந்து வந்தார். இந்திய துணை ராணுவப்படையில் பணியாற்றி வந்த போது இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இவருடைய கால்கள் இரண்டும் செயலிழக்கும் நிலை உருவானது. அத்துடன் இவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். கிட்டதட்ட 10 ஆண்டுகள் இவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.  இந்தச் சூழலில் உடல்நலம் சற்று சரியான பிறகு பாரா தடகள போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 2016ஆம் ஆண்டு முதல் வட்டு எறிதல் பயிற்சியை மேற்கொண்டு வந்தார். 


2017 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாரா தடகள போட்டியில் இவர் வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் 4ஆவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை சற்று தவறவிட்டார். இப்படி இருக்கும் பட்சத்தில் நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலம் வென்று இருந்தார். ஆனால் தற்போது அந்தப் பதக்கம் திரும்ப பெற பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


 


மேலும், வாசிக்க: 


Avani Lekhara: 11 வயதில் விபத்து... 19 வயதில் தங்கம்... முதுகு தண்டு பாதிப்பில் மீண்ட ‛பீனிக்ஸ்’ அவானி லெகாரா!