ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று நிறைவு பெற்றது. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் வழக்கமாக பங்கேற்கும் நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. இந்த போட்டியில், கனடாவைச் சேர்ந்த சைக்கிள் வீராங்கனை கெல்ஸி மிட்செல் பங்கேற்றார். அவர் சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றார்.


இந்த நிலையில், கெல்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பிறகு, கனடா திரும்புவதற்காக சக வீராங்கனைகளுடன் கெல்ஸி மிட்செல் ஜப்பானில் உள்ள விமான நிலையத்திற்கு வருகிறார்.




அப்போது, அனைத்து வீராங்கனைகளும் விமான நிலையத்தில் பரிசோதனை முடிந்து காத்திருந்தபோது, கெல்சி மிட்செல் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் அந்த மெட்டல் டிடெக்டர் வழியாக வருகிறார். அவர் அந்த இயந்திரம் வழியாக கடந்து வரும்போது மட்டும் அலார்ம் அடிக்கிறது. இதனால், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.






கெல்ஸி மிட்செலும் அலார்ம் அடித்த அதிர்ச்சியில் தனது உடைகளை பரிசோதிக்கிறார். அப்போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மெட்டல் டிடெக்டர் எனப்படும் பரிசோதனை கருவி மூலம் சோதிக்க உடனே வந்தார். அப்போது, மிட்செல் சட்டென்று தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வெளியில் எடுத்து சிரிப்பார். உடனே அந்த பாதுகாப்பு அதிகாரி உள்பட விமான நிலையத்தில் இருந்த அனைவரும் கெல்ஸி மிட்செலை  கைதட்டி பாராட்டுவார்கள்.




இதை, அங்கே இருந்த ஒருவர் வீடியோ எடுத்திருந்தார். தற்போது, கெல்ஸி மிட்செல் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக ஜப்பான் நாட்டிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


27 வயதான கெல்ஸி மிட்செல் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமின்றி,  உக்ரைனில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டுதல் இறுதிப்போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். சைக்கிள் ஓட்டுதலில் கனடாவிற்காக தங்கம் வென்ற இரண்டாவது பெண் என்ற பெருமையையும் மிட்செல் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு முதலே சைக்கிள் ஓட்டும் போட்டியில் பங்கேற்று வரும் கெல்ஸி மிட்செல் அதற்கு முன்பு கால்பந்து வீராங்கனையாக வலம் வந்தவர். கெல்ஸி மிட்செல் பெற்ற தங்கம் உள்பட கனடா ஒலிம்பிக் போட்டியில் 6 தங்கம், 6 வெள்ளி , 11 வெண்கலம்  பெற்று அசத்தியது.