டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா கோலகலாமாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் மிகவும் குறைவான அளவிலான வீரர் மற்றும் வீராங்கனைகளே பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளின் குறிக்கோள் உணர்ச்சிகளுடன் ஒன்று இணைவோம் (United By Emotion)என்பது தான். 


ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஆண் வீரர் மற்றும் பெண் வீராங்கனை என இரண்டு பாலினத்தை சேர்ந்தவர்களும் கொடி பிடித்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் அல்லது வீராங்கனை தேசிய கொடியை ஏந்தி வருவார்கள். இம்முறை பாலின சமத்துவம் என்பதை கடைபிடிக்க ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். 


 






அந்தவகையில் இந்தியா சார்பில் ஆடவர் ஹாக்கி அணியின் மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றனர். இந்தியாவின் தேசிய கொடியை ஒலிம்பிக் போட்டியில் ஏந்தி செல்லும் 6ஆவது ஹாக்கி வீரர் என்ற பெருமையை மன்பிரீத் சிங் ஆவார். இதற்கு முன்பாக லால் சிங் போகாஹரி, மேஜர் தயான்சந்த், பல்பீர் சிங் சீனியர், ஷஃபர் இக்பால் மற்றும் பிரகாத் சிங் ஆகிய ஐந்து வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தேசிய கொடியை ஏந்தி சென்றுள்ளனர். 


 






அதேபோல சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் வரலாற்றில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் மூன்றாவது இந்திய பெண் என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக தடகள வீராங்கனைகள் ஷைனி வில்சன் மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.  இந்திய அணி ஈரான் நாட்டிற்கு அடுத்தப்படியாக 12ஆவது நாடாக தொடக்க விழாவில் வந்தது. இந்தியா சார்பில் 19 வீரர் வீராங்கனைகள் மற்றும் 6 அதிகாரிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர். நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் சரத் கமல் மற்றும் சானியா மிர்சா ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


 






ஒலிம்பிக் தொடக்க விழாவை முன்னிட்டு இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மேரி கோம் தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஒரு பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில். 5 முறை உலகசாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோமிற்கு அவருடைய மகன்கள் வாழ்த்துகளை தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


மேலும் படிக்க: மனதை உருக்கிய ஒலிம்பிக் தருணங்கள்- பதக்கத்தை நூல் இழையில் தவறவிட்ட இந்தியர்கள் !