டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. அதில் இந்திய மகளிர் அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க முதலே ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு மிகவும் சவால் அளித்தது. இறுதியில் 1-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 


இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி யாரை சந்திக்க உள்ளது? அந்தப் போட்டி எப்போது? எங்கே நேரலையில் பார்ப்பது?


 






அரையிறுதிப் போட்டி யாருடன் தெரியுமா?


இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா மகளிர் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அர்ஜென்டினா அணி டோக்கியோ ஒலிம்பிக் குரூப் பிரிவில் 3 வெற்றி மற்றும் இரண்டு தோல்வி அடைந்திருந்தது. இன்றைய காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது. எனினும் ஆஸ்திரேலிய அணி அளவிற்கு அர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த அணி இல்லை. எனவே இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. 


எப்போது அரையிறுதிப் போட்டி?


இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. 4ஆம் தேதி காலை நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணி பிரிட்டன் அணியை எதிர்த்து மற்றொரு அரையிறுதியில் விளையாட உள்ளது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. 


எங்கே எப்படி நேரலையில் பார்ப்பது?


இந்தியா-அர்ஜென்டினா போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்க முடியும். அதேபோல் சோனியின் மொபைல் அப் சோனி லிவ் என்ற செயலியிலும் நேரலையாக இந்தப் போட்டியை காணலாம். அதேபோல் சோனி லிவ் இணையதளத்திலும் இந்தப் போட்டியை நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதற்கிடையே நாளை நடைபெற ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து நாளை காலை 7.00 மணிக்கு விளையாட உள்ளது. கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. எனவே அதற்கு இந்திய அணி நாளைய போட்டியில் பழி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க:ஒலிம்பிக் வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர் 6ஆவது இடம்!