டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் அமித் பங்கல் (52 கிலோ),மணிஷ் கெளசிக் (63 கிலோ), ஆஷிஷ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69கிலோ), சதீஷ் குமார் (91 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ). லோவ்லினா பார்கோயின் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களில் விகாஸ் கிருஷ்ணன், மணிஷ் கௌசிக், ஆஷிஷ் குமார் ஆகிய மூவரும் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் சிறப்பாக சதீஷ் குமார் சண்டை செய்தார். அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் அவர் சிறப்பாக ஜமைக்க வீரரின் முயற்சிகளை தடுத்தார். முதல் இரண்டு ரவுண்ட் சதீஷ் குமாருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் மூன்றாவது ரவுண்டில் ஜமைக்கா வீரர் இந்திய வீரரை நாக் அவுட் செய்ய முயன்றார். அதை சதீஷ் குமார் சிறப்பாக எதிர்கொன்டார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் சதீஷ் குமார் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிச் சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் அவரும் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்வார். ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற்றில் ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் சதீஷ் குமார் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே நேற்று நடைபெற்ற மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றில் பூஜா ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து சண்டை செய்தார். தொடக்க முதலே பூஜா ராணி சிறப்பாக சண்டை செய்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அடுத்த சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் இவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகிவிடும்.
அதேபோல் நேற்று முன்தினம்நடைபெற்ற மகளிர் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் ஜெர்மனியின் நடின் ஏப்டெஸை 3-2 என வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவரும் காலிறுதிச் சுற்றில் வெற்றி பெரும் பட்சத்தில் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துவிடுவார். ஆகவே இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி : நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் !