டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி குரூப் போட்டியில் இன்று இந்திய அணி நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்கள் கோல் அடிக்கும் முனைப்பில் பல முயற்சிகளை முன்னெடுத்தனர். எனினும் அதனை அர்ஜென்டினா வீரர்களின்  தடுப்பு ஆட்டம் சிறப்பாக முறியடித்தது. முதல் கால்பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 


இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியிலும் இந்திய வீரர்கள் கோல் அடிக்க பல முறை முயற்சி செய்தனர். அதுவும் சரியாக கை கொடுக்கவில்லை. அர்ஜென்டினா வீரர்களுக்கும் இரண்டு முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய வீரர்களின் தடுப்பு ஆட்டம் சிறப்பாக இருந்ததால் அர்ஜென்டினா அணியால் கோல் போட முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 


மூன்றாவது கால்பாதியில் இந்திய அணி கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக கோல் அடித்தது. அதன்மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் மூன்றாவது கால்பாதியின் கடைசி விநாடிகளில் மீண்டும் இந்தியாவிற்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதை இந்திய அணி கோலாக மாற்ற தவறியது. இதனால் மூன்றாவது கால்பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது. நான்காவது கால்பாதியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து 1-1 என சமன் செய்தது. அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி ஒரு ஃபில்டு கோல் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது. 


இந்திய அணி முதல் குரூப் போட்டியில் நியூசிலாந்து அணியை 3-2 என வென்றது. அதன்பின்னர் இரண்டாவது குரூப் போட்டியில் 7-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மூன்றாவது போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணி அடுத்த தன்னுடைய கடைசி குரூப் போட்டியில் ஜப்பான் அணியை நாளை மதியம் 3 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்திய அணி மூன்று  வெற்றி மற்றும் ஒரு தோல்வி என பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி !