டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதிச் சுற்றில் ஜப்பான் நாட்டின் அகேன் யமாகுச்சியை 21-13,22-20 என்ற கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள தாய் சு யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தாய் சு யிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-18,21-12 என்ற கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் சிந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் சூழல் உருவானது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 15 முறை மோதியுள்ளனர். அதில் ஹீ பிங் 9 முறையும் சிந்து 6 முறையும் வென்றுள்ளனர். ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டி என்பதால் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமை பி.வி.சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார்.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் சிந்துவின் இரண்டவது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை மெரின் இடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தச் சூழலில் தற்போது தொடர்ச்சியாக இந்தியாவிற்கு மூன்றாவது முறையாக ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதியில் சதீஷ் குமார் போராடி தோல்வி..!