டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை, ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் தற்போது பதக்க பட்டியலில் பின் தங்கிய நிலையில் உள்ளது.
இந்த ஒலிம்பிக் தொடரை பொருத்தவரை, தினந்தினம் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அந்த வரிசையில், ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியின்போது மொரோக்கா நாட்டின் யூனஸ் பாலா - நியூசிலாந்தின் டேவிட் நியிக்கா ஆகியோர் போட்டியிட்டனர். இந்த போட்டியில், மூன்றாவது சுற்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நியூசிலாந்து வீரரின் காதை கடிக்க முயற்சித்தார் யூனஸ் பாலா. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரவலாகி வருகின்றது.
1997-ம் ஆண்டு, பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், இதே போன்ற ஒரு சம்பவத்தை செய்துள்ளார். மைக் டைசனின் அந்த போட்டியை உலக குத்துச்சண்டை ரசிகர்கள் நினைவுகூர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். அமெரிக்க வீரர்களான மைக் டைசன் மற்றும் இவாண்டர் ஹோலிஃபீல்ட் மோதிக் கொண்ட ஒரு போட்டியில், மைக் டைசன் இவாண்டரின் காதை கடிக்க முயற்சித்துள்ளார். ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு, மைக் டைசன் மீதான நல்ல பிம்பம் உடைந்தது. விளையாட்டு களத்தில் இது போன்ற சம்பவங்களை ரசிகர்களை ஆதரிக்கவில்லை. அதுமட்டுமின்றி, 15 மாதங்களுக்கு அவர் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள கூடாது என தடைவிதித்து அப்போதைய உலக குத்துச்சண்டை அமைப்பு உத்தரவு போட்டது.
இப்போது, ஒலிம்பிக் தொடரில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது, உலக ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. எனினும், காது கடித்து எதிரணியில் இருப்பவரின் மனநிலையை குழப்ப முயற்சித்த யூனஸின் முயற்சி வீணானது. இந்த களேபரங்களுக்கு நடுவிலும், போட்டியில் கவனம் செலுத்திய நியூசிலாந்து வீரர் மூன்றாவது சுற்றை வென்று போட்டியையும் கைப்பற்றினார்.
இந்தியாவைப் பொருத்தவரை, குத்துச்சண்டை விளையாட்டை பொருத்தவரை, 51 கிலோ எடைப்பிரிவில், இரண்டாவது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் இன்று களமிறங்கினார். இந்த போட்டியின் முதல் சுற்றை வேலென்சியா வென்றார். இரண்டாவது சுற்றை, மேரி கோம் வென்றார். இரு வீராங்கனைகளும் போட்டியை வெல்ல வேண்டுமென்பதற்காக டஃப் கொடுத்தனர். ஆனால், மூன்றாவது சுற்றை மீண்டும் வேலென்சியா வென்றார். இதனால், தோல்வியோடு ஒலிம்பிக் சுற்றில் இருந்து மேரி கோம் வெளியேறியுள்ளார். இந்நிலையில், லவ்லினா, பூஜா ராணி, சதிஷ் குமார் ஆகியோர் இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.