டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ எடைப்பிரிவிலும், தீபக் பூனியா 87 கிலோ எடைப்பிரிவிலும், அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவிலும் போட்டியிட்டனர்.  முதல் சுற்று போட்டியில் தீபக் புனியா நைஜீரிய வீரர் அகியோமர் எக்ரெக்மேவை எதிர்த்து போட்டியிட்டார். இதில், 12-1 என்ற புள்ளிக்கணக்கில் அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அவர். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில், சீன வீரர் லின் சுஷினை எதிர்த்து விளையாடி 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.  அத்துடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.


இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தீபக் புனியா அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லரை எதிர்த்து விளையாடினார். மிகவும் பலம் வாய்ந்த அமெரிக்க வீரரை எதிர்த்து புனியா விளையாட இருந்ததால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் அமெரிக்க வீரர் சிறப்பாக செயல்பட்டு 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தீபக் புனியா நாளை நடைபெற உள்ள வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்க உள்ளார்.  தீபக் புனியா உலக சாம்பியன் டேவிட் டெய்லரிடம் தோல்வி அடைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. எனினும் அவருடைய காலிறுதிச் சுற்றில் கடைசி 7 விநாடிகளில் மீண்டு வந்து தீபக் புனியா அசத்தியிருந்தார். 


 






முன்னதாக பெண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் அன்ஷு மாலிக், சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பல்கேரியாவின் இரியானா குராச்கினாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் 2-8 என்ற புள்ளிக்கணக்கில் அன்ஷூ மாலிக் போட்டியை இழந்தார். இதனால், காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். எனினும், மல்யுத்த ரெபிசாஜ் முறைப்படி வெண்லகப் பதக்கம் வெல்வதற்கான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அன்ஷூ மாலிக்கிற்கு உள்ளது. 19 வயதேயான அன்ஷூ மாலிக், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.


மேலும் படிக்க: இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தை உறுதி செய்த அசாமின் முதல் பெண்: யார் இந்த லோவ்லினா?