டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம்பெற்று வருகிறது.
இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 51-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 46வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 19 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 17 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்திலும், 14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது.
ஒலிம்பிக்கில் இந்தியா இன்று:
3000 மீட்டர் ஸ்டீப்புள்சேஸ்: 3000 மீட்டர் ஸ்டீப்புள் சேஸ் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். அதில் இரண்டாவது ஹீட்ஸ் பிரிவில் இவர் ஓடினார். தொடக்கத்தில் சற்று சிறப்பாக ஓடிய அவினாஷ் சேபிள் இறுதி வரை அதை தக்க வைக்க முயற்சி செய்தார். இறுதியில் பந்தைய தூரத்தை 8.18.12 என்ற நேரத்தில் முடித்தார். அத்துடன் புதிய தேசிய சாதனையை படைத்தார். அவர் தன்னுடைய முந்தைய தேசிய சாதனையான 8.20.20 என்ற நேரத்தை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
துப்பாக்கிச் சுடுதல்: இன்று, ரெபிட் பிரிவு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ராஹி சர்னோபட் 96,94,96 என மொத்தமாக 286 புள்ளிகள் பெற்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இரண்டு தகுதிச் சுற்றுகளிலும் சேர்த்து ராஹி சர்னோபட் 573 புள்ளிகள் பெற்றார். இதனால் அவர் 33ஆவது இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் ரெபிட் பிரிவு தகுதிச் சுற்றில் 96,97,97 என மொத்தமாக 290 புள்ளிகள் எடுத்தார். இரண்டு தகுதிச் சுற்றுகளிலும் சேர்த்து மனு பாக்கர் 582 புள்ளிகள் எடுத்தார். இதனால் அவர் முதல் 8 இடங்களுக்குள் வரும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த இரண்டிலும் எடுக்கும் புள்ளிகளை வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். எனவே இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதிச் சுற்றுடன் வெளியேறி பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளனர்.
குத்துச்சண்டை: மகளிர் 60 கிலோ எடை ப் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் பங்கேற்கிறார். இரண்டாவது சுற்றில் அவர் தாய்லாந்து வீராங்கனை சீசோண்டே சுடோபார்ன் என்பவரை எதிர்கொண்டார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜீத் கவுர் தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். அத்துடன் காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.
ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் எம்.பி.ஜபீர் பங்கேற்றார். இவர் 5ஆவது ஹீட்ஸில் ஓடினார். இந்தச் சுற்றில் அவர் பந்தைய தூரத்தை 50.77 நேரத்தில் கடந்து 7ஆவது இடத்தை பிடித்தார். ஒவ்வொரு ஹீட்ஸ் பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுடன் மொத்தமாக ஹீட்ஸ் பிரிவில் சிறப்பான நேரத்தை வைத்திருக்கும் அடுத்த 4 பேரும் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். அந்தவகையில் தன்னுடைய ஹீட்ஸ் சுற்றில் கடைசி இடத்தை பிடித்ததன் மூலம் முதல் சுற்றுடன் எம்.பி.ஜபீர் வெளியேறியுள்ளார்.
100 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்று போட்டியில் பங்கேற்ற டூட்டி சந்த், பந்தைய தூரத்தை 11.54 நேரத்தில் கடந்து தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 7ஆவது இடத்தை பிடித்தார். இது அவரின் சொந்த சிறப்பான நேரமான 11.17 விநாடிகள் என்பதை விட மிகவும் அதிகமான ஒன்றாகும். இதனால் மகளிர் 100 மீட்டர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை டூட்டி சந்த் இழந்தார். அத்துடன் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
ஹாக்கி: ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக ஒலிம்பிக் போட்டிகளில் 1980 போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒரு போட்டியில் வென்றது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. எனவே 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் பிரிவில், ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
400 மீட்டர் கலப்பு ரிலே: இந்த போட்டியில், முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் இந்த போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்றனர். இதில், 3.19.93 நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து 13-வது இடத்தில் நிறைவு செய்தனர். இதனால், இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தனர். ஆனால், இன்று இந்திய அணி பதிவு செய்துள்ள நேரம், சீசன் பெஸ்டாக பதிவு செய்துள்ளனர்.
வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தென்கொரியாவின் ஆன் சன்னை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியை 6-0 என்ற கணக்கில் தென் கொரிய வீராங்கனை வென்றார். அதனால், இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
பேட்மிண்டன்: காலிறுதிச் சுற்றில் ஜப்பான் நாட்டின் அகேன் யமாகுச்சியை எதிர்த்து பி.வி. சிந்து விளையாடினார். 21-13, 22-20 என்ற கணக்கில், சிந்து வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு சிந்து முன்னேறி அசத்தியுள்ளார்.