டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம்பெற்று வருகிறது. 


இன்றைய போட்டி முடிவுகளின் நிலவரப்படி, மீரா பாய் சானு வென்று கொடுத்த ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 43-வது இந்தியா இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியா 39வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களுடன் ஜப்பான் முதல் இடத்திலும், 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 11 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் பதக்க பட்டியலில் நிலை பெற்றுள்ளது. நேற்றைய நிலவரப்படி அமெரிக்கா முதல் இடத்திலும் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஒலிம்பிக்கில் இந்தியா இன்று: 


கலப்புப் பிரிவு வில்வித்தையில் தோல்வி: 
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தீபிகா குமரி, அடானு தாஸ், தருண்தீப் ராய்,பிரவீன் ஜாத்வ் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இதில் கலப்பு பிரிவு வில்வித்தையில் இந்தியா சார்பில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள்  காலிறுதிச் சுற்றில் பலம் வாய்ந்த தென்கொரிய அணிக்கு எதிராக இந்திய இணை 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. அதேபோல் ஆடவர் குழு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தருண்தீப் ராய், அடானு தாஸ், பிரவீன் ஜாதவ் ஆகியோரும் காலிறுதிச் சுற்றில் தென்கொரியா அணியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. 


ஹாக்கியில் மூன்றாவது தோல்வி: 
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் போட்டியில் இன்று இந்திய மகளிர் அணி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் பிரிட்டன் அணி முதல் கோல் அடித்து அசத்தியது. அதன்பின்னர் மீண்டும் கிடைத்த ஒரு வாய்ப்பில் ஃபில்ட் கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் கால்பாதியின் முடியில் இந்திய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. 



அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் இந்திய மகளிர் அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திய இந்திய அணியின் குர்ஜீத் கவுர் கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் முன்னிலையை குறைத்தது. இதன்பின்னர் நடைபெற்ற 3ஆவது கால்பாதியில் பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது. கடைசி கால்பாதியில் பிரிட்டன் அணி மேலும் ஒரு கோல் அடித்து 4-1 என முன்னிலையை உயர்த்தியது. இறுதியில் பிரிட்டன் அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணிக்கு நடப்பு ஒலிம்பிக் தொடரில் இது மூன்றாவது தோல்வி ஆகும்.


பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி






ஒலிம்பிக் பேட்மிண்டனில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் போட்டியில் பி.வி.சிந்து முதல் போட்டியில் இஸ்ரேல் வீராங்கனையை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-7,21-10 என்ற கணக்கில் 28 நிமிடங்களில் வென்று அசத்தினார்.அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமையும் பி.வி.சிந்து 21-16 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் குரூப் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்று பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 


மகளிர் வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்:


டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூட்டான் நாட்டின் கர்மாவை 6-0 என வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபரை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் செட்டில் ஜெனிஃபர் 26-25 என்ற கணக்கில் வென்றார். அதன்மூலம் 2-0 என முன்னிலை பெற்றார். அடுத்து இரண்டாவது செட்டில் 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறியுள்ளார். 



குத்துச்சண்டையில் பூஜா ராணி அசத்தல்:









மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் இரண்டாவது சுற்றில் பூஜா ராணி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பூஜா ராணி அல்ஜிரியா நாட்டைச் சேர்ந்த செயிப் இசார்க்கை எதிர்த்து சண்டை செய்தார். இதில் முதல் ரவுண்டில் அல்ஜிரியா வீராங்கனையை சிறப்பாக தாக்கி புள்ளிகளை பெற்றார். அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் பூஜா ராணி அசத்தலாக விளையாடினார். இரண்டு சுற்றுகளில் பூஜா ராணி அல்ஜிரிய வீராங்கனையைவிட அதிகமான புள்ளிகளை பெற்றார். மூன்றாவது சுற்றில் சரியான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டார்.  இறுதியில் 5-0 என்ற கணக்கில் அல்ஜிரியா வீராங்கனையை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.



ஆடவர் பேட்மிண்டன் சாய் பிரணீத் வெளியேற்றம்:


ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் தன்னுடைய முதல் குரூப் போட்டியில்  இஸ்ரேல் வீரர் ஸில்பர்மேன் இடம் 21-17,21-15  என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் இன்று அவர் தனது இரண்டாவது குரூப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கெலிஜோவை எதிர்கொண்டார். இந்த கேமை 21-14 என்ற கணக்கில் வென்ற கெலிஜோ. அத்துடன் 21-14,21-14 என்ற செட் கணக்கில் சாய் பிரணீத்தை வீழ்த்தினார்.