டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி குரூ பிரிவில் இந்திய மகளிர் அணி 2 வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடம் நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 1-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் 41ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. 


இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இரண்டாவது நிமிடத்திலேயே இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியில் தொடக்க முதலே அர்ஜென்டினா அணி கோல் அடிக்க அதிக முயற்சிகளை மேற்கொண்டது.


அந்தவகையில் இரண்டாவது கால்பாதியில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட அர்ஜென்டினா வீராங்கனைகள் கோல் அடித்தனர். அத்துடன் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தனர். அதன்பின்னர் இந்திய வீராங்கனைகள் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தனர். 


 






இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கால் பாதியில் அர்ஜென்டினா அணி மறுபடியும் கோல் அடிக்க அதிக முயற்சியை எடுத்தது. அப்போது அர்ஜென்டினா அணிக்கு மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணியின் வீராங்கனைகள் சிறப்பான தடுப்பு ஆட்டத்தை மேற்கொண்டனர். இதனால் இந்திய வீராங்கனைகளால் கோல் அடிக்க முடியவில்லை. மூன்றாவது கால்பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது. நான்காவது மற்றும் கடைசி கால்பாதியில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க முடிந்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் இறுதியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் நாளை மறுநாள் நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டன் அணியை எதிர்கொள்கிறது. 


இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. முதல் முறையாக 1980ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் ஹாக்கி அறிமுகம் செய்யப்பட்ட போது இந்திய அணி பங்கேற்றது. அதில் இந்திய அணி 4ஆவது இடத்தை பிடித்தது. அதன்பின்னர் 36ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இரண்டாவது முறையாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது. அதில் அனைத்து போட்டிகளிலும் ஒரு டிரா மட்டும் செய்தது. மற்ற போட்டிகளில் தோல்வி அடைந்தது. அத்துடன் கடைசி இடத்தைப் பிடித்தது. இந்தச் சூழலில் தற்போது மூன்றாவது முறையாக இந்திய மகளிர் அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதுவரை இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றதில்லை. எனவே நாளை மறுநாள் நடைபெறும் வெண்கலப்பதக்க போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால் தன்னுடைய முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் படிக்க:இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதிசெய்த ரவிக்குமார் தாஹியா, யார் தெரியுமா?