இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில் நேற்று களமிறங்கினார். இந்த போட்டியில், கொலம்பியா வீராங்கனை இங்கிரித் வேலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் சுற்றை வேலென்சியா வென்றார். இரண்டாவது சுற்றை, மேரி கோம் வென்றார். இரு வீராங்கனைகளும் போட்டியை வெல்ல வேண்டுமென்பதற்காக டஃப் கொடுத்தனர். ஆனால், மூன்றாவது சுற்றை மீண்டும் வேலென்சியா வென்றார். இதனால், தோல்வியோடு ஒலிம்பிக் சுற்றில் இருந்து மேரி கோம் வெளியேறினார். 


ஆனால், போட்டி முடிந்த சில மணி நேரங்களில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது ட்விட்டர் பதிவில், “என்னைப் பொருத்தவரை நீங்கள்தான் வெற்றியாளர். ஆனால், நடுவர்களின் கணக்கு மாறாக இருந்துள்ளது.” என்று பதிவிட்டிருந்தார்.






அதனை தொடர்ந்து, மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலென்சியாவுடனான போட்டி தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னர், எனது ஆடையை மாற்றி வரச் சொன்னார்கள். இதற்கான காரணத்தை யாரேனும் எனக்கு விளக்க முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 



மேலும், போட்டி முடிந்தபோது தான் வெற்றி பெற்றதாக நினைத்ததாகவும், வேலென்சியாவின் கை உயர்த்தப்பட்டபோது அதிர்ச்சியாக இருந்ததாகவும் மேரி கோம் தெரிவித்துள்ளார். நடுவர்களின் மொத்த புள்ளிக்கணக்கை மதிப்பிடும்போது, வேலென்சியாவுக்கு ஆதரவாகவும், மேரி கோமிற்கு புள்ளிகள் குறைவாகவும் இருந்தது. இதனால், போட்டி முடிவில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் மேரி கோம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.


எனினும், நடுவர்களின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாத சூழல் நிலவுவதால், மேரி கோம் விளையாடிய போட்டியின் முடிவு குறித்து எதுவும் செய்ய முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.


மேரி கோம் மற்றும் லோவ்லினா ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில், ஜெர்ஸியில் அவர்களது பெயர் மற்றும் நாட்டின் பெயர் ஆகியவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஜெர்ஸி சர்ச்சை குறித்து பேசிய இந்திய குத்துச்சண்டையின் ஹை-பர்ஃபாமென்ஸ் இயக்குனர் சாண்டியாகோ நெய்வா, “வீரர் வீராங்கனைகளையின் கடைசி பெயர் எழுத்தப்பட்ட ஜெர்ஸியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோம் அல்லது மேரிஎன இருந்தால் பயன்படுத்தலாம், மேரி கோம் என எழுதப்பட்ட ஜெர்ஸியை பயன்படுத்த கூடாது” என விளக்கம் அளித்துள்ளார். இதனால், மேரி கோம் மற்றும் லோவ்லினா ஆகியோர் ஜெர்ஸி மாற்றப்பட்டு, பெயர் இல்லாத ஜெர்ஸி அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.