பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.  இதில் தமிழ்நாடு சார்பாக டேபிள் டென்னிஸ் போட்டியில் சரத் கமல் பங்கு பெறுகிறார். யார் இவர் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்: 


யார் இந்த சரத் கமல்?


ஜூலை 12 ஆம் தேதி 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சரத் கமல். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பிஎஸ்பிபி பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர் லயோல கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். இவரின் தந்தை மற்றும் மாமா டேபிள் டென்னிஸ் வீரராக இருந்ததால் இவரும் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.


பள்ளிப்பருவத்தில் இருந்தே டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கிய சரத் கமல், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசியப் போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்து சர்வதேச அளவில் விளையாட ஆரம்பித்தார். 2002 ஆம் ஆண்டு முதல் டேபிள் டென்னிஸ் போட்டியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்.


கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டேபிள் டென்னிஸ் விளையாடி வரும் சரத் கமல், காமன்வெல்த் போட்டி, ஆசிய போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருகிறார். தேசிய அளவில் பத்து முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தன் வசம் வைத்திருக்கிறார்.  


ஒலிம்பிக்கில் ஐந்தாவது முறை:


2004ல் தேசிய போட்டியில் வென்ற சரத் கமல் தொடர்ந்து 2006 முதல் 2010 வரை, ஐந்து முறை சீனியர் நேஷனல்களில் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். 2011ஆண்டு குழு போட்டியில் தங்கம் வென்றார். 2018-2019 ஆண்டு நடந்த தேசிய போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த சக வீரரான சத்தியன் ஞானசேகரனை வீழ்த்தி 9-வது தேசிய பட்டத்தை தன் வசப்படுத்தினார். இதன்மூலம் 8 முறை தேசிய பட்டத்தை வென்றிருந்த கமலேஷ் மேத்தாவின் சாதனையை தகர்த்தார். 


இவ்வாறாக தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வரும் சரத் கமல் 60 சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலமும் வென்றுள்ளார். இச்சூழலில் தான் ஐந்தாவது முறையாக ஒலிம்பில் போட்டியில் விளையாட உள்ளார் சரத் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.