டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் இது.


 இவர் இந்தப் போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோ பளு தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில்  115 கிலோ தூக்கி அசத்தினார். இதன்மூலம் இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.  பளுதூக்கும் போட்டிகளில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் பதக்கம் இது.





ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 119 கிலோ எடையை தூக்கி இவர் உலக சாதனைப் படைத்திருந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இவர் பதக்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கை இருந்தது. இதை தற்போது மீராபாய் சானு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க பட்டியல் கணக்கையும் மீராபாய் சானு துவக்கி வைத்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவை பலரும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  






இதற்கிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார் வெள்ளிமகள் மீராபாய் சானு. அவரது பதிவில், ‘என் கனவு நனவானது. எனது இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.எனக்காகப் பிரார்த்தனை செய்த பலகோடி இந்தியர்களுக்கு நன்றி. அவர்களது பிரார்த்தனை என்னுடன் இருந்தது.என் குடும்பம் குறிப்பாக என் அம்மாவுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்காகப் பல தியாகம் செய்தார் என் மீது நம்பிக்கை வைத்தார்.மேலும் இந்திய அரசு, விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் அசோஷியேஷன், பளுதூக்கும் ஃபெடரேஷன், ரயில்வே துறை உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட நன்றி.இந்தப் பயணத்தில் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்த ஸ்பான்ஸர்களுக்கு நன்றி.எனது கோச் விஜய் சர்மா சார் மற்றும் இதர ஊழியர்களுக்கு நன்றி.ஒட்டுமொத்த பளுத்தூக்கும் துறைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ஜெய்ஹிந்த்!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.