ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலப்பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளார் பி.வி.சிந்து. நாடு திரும்பியதை அடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அவர். 






அவர் கூறுகையில், ’நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளேன். எனக்கு ஆதரவளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் குறிப்பாக பாட்மிண்டன் அசோஷியேஷனுக்கும் நன்றி. இது மகிழ்ச்சியான தருணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் போட்டி நடைபெற்று அன்று கடினமான நாளாக இருந்ததா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும்போது கடினமான நாட்கள் என எதுவுமே இல்லை’ என பதிலளித்துள்ளார்.  சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் நடைபெறும் கொடியேற்ற விழாவில் பிரதமர் அழைப்பின்பெயரில் பி.வி. சிந்து கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


பதக்கம் வென்ற பிறகு உடனடியாகப் பேட்டியளித்திருந்த சிந்து, “நான் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். பல வருடங்கள் கடுமையாக உழைத்தேன். நான் நன்றாக விளையாடினேன் என்று நினைக்கிறேன். நான் நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தப்பட வேண்டுமா?” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.