ஹாக்கி போன்ற வேகமாக செயல்பட்டாக வேண்டிய விளையாட்டில் கோல் கீப்பராக இருப்பவரை மற்ற ஹாக்கி வீரர்களுடன் ஒப்பிடும்போது அவரின் செயல்பாடு செயலற்றதாகவும் கவர்ச்சி இல்லாததாகவும் நமக்கு தெரியலாம். ஆனால் கோல் கீப்பர்கள்தான் எதிரணியின் ஆக்ரோஷமான தாக்குதல்களை லாவகமாக தடுத்து அணியின் வெற்றிக்கு பெரும்துணையாக இருப்பார்கள் என்பதை விளையாட்டு ஆர்வலர்கள் நன்கு அறிவார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி வலிமையான எதிரிகளை எதிர்கொண்டு அற்புதமான வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்தவர் பள்ளி பருவத்தில் கோல்கீப்பராகவும் தற்போது ஒடிசா முதல்வராகவும் இருக்கும் நவீன் பட்நாயக் ஆவார்.
இந்திய ஹாக்கி அணியில் திருப்புமுனையை ஏற்படுத்தியதற்கான பெருமையின் பெரும்பகுதி ஒடிசா மாநிலத்தையே சாரும். பணக்காரர்கள் அல்லாத மாநிலமாக விளங்கும் ஒடிசா மாநிலம்தான் தேசிய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் தற்போதய அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸராக விளங்குகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் போன்ற கவர்ச்சியான விளையாட்டுகளுக்கு பின்னால் அனைவரும் சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஹாக்கி விளையாட்டுக்கான உட்கட்டமைப்பை வலுப்படுத்தி அதற்கான நிதியை செலவு செய்வதில் விரும்பம் கொண்டவராக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இருந்து வருகிறார்.
டூன் பள்ளியில் பயின்ற நாட்களில் ஹாக்கி அணியின் கோல் கீப்பராக இருந்த நவீன்பட்நாயக்கை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை; பட்நாயக்கும் ஹாக்கி விளையாட்டு மீது இருந்த தனது ஆர்வத்தை பொதுவெளியில் எங்கேயும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தபோது பல விருதுகளை வென்றதுடன் தியான் சந்த் போன்ற வீரர்களையும் ஹாக்கி நம் நாட்டிற்கு வழங்கி இருந்தது. இருப்பினும் ஹாக்கி அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸராக இருந்த சஹாரா நிறுவனம் வெளியேறிய நிலையில் மோசமான நிலைக்கு இந்திய ஹாக்கி அணி சென்றது. இந்த மோசமான நேரத்தில்தான் பட்நாயக்கின் ஹாக்கி மீதான பார்வை இந்திய ஹாக்கி அணி மீட்சி பெற பெரிதும் உதவியது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை ஒடிசா மாநிலம்தான் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஸாராக இருந்து நடத்தியது. அச்சமயத்தில் ஒடிசா அரசு கடும் நிதிச்சிக்கலில் இருந்த நிலையிலும் இந்திய ஹாக்கி அணிக்கு நிதியை தருவதற்காக கணிசமான நிதிவருவாயை கொண்ட மாநில அமைப்பாக இருந்த ஒடிசா மைனிங் கார்ப்பரேஷனில் இருந்து பணத்தை செலவு செய்தார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
தடுமாறிக்கொண்டிருந்த ஹாக்கி அணிக்கு ஒடிசா அரசு கொடுத்த பணம் அதிகமானதாக இல்லை என்றாலும் கணிசமான அளவில் அணியை மீட்சிக்கு கொண்டுவர உதவியது. ஒவ்வொரு ஆண்டும் ஹாக்கி அணிகளுக்கு வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் பணம் தற்போது வேலை செய்ய தொடங்கி உள்ளது. இந்திய ஆண்கள் அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. 41 ஆண்டுகளுக்கு இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய ஹாக்கி அணிகள் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ ஆனால் நவீன்பட்நாயக் கொடுத்த நிதி காரணமாக இந்திய ஹாக்கி அணி ஈவுத்தொகையை கொண்டுள்ளது. இதன் மூலம் ஹாக்கி விளையாட்டு மீண்டும் இந்திய மக்களின் மனதை வென்றெடுக்கும் என நம்பலாம்.
இந்திய ஹாக்கி அணி புத்துயிர் பெருவதை கண்டு ஒடிசா அரசின் பங்களிப்பை நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்டோர் பாராட்ட தொடங்கி உள்ளனர். ஒடிசாவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சக செயலர் வினீஸ் கிருஷ்ணா கூறும்போது ’’இந்த சாதனைக்கு எங்கள் முதல்வரின் தொலைநோக்கு பார்வைதான் காரணம்’’ என கூறுகிறார்.
ஒடிசார் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமை ஆலோசகரும் தமிழருமான ஆர்.பாலகிருஷ்ணன் தனது சமூகவலைத்தள பதிவில் திணை மற்றும் அரிசி தவிர ஒடிசாவின் வயல்களிலும் ஹாக்கியை வளர்க்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
ஹாக்கி அணிக்கு புதிய புத்துணர்வை ஊட்டியதில் நவீன்பட்நாயக்கின் பங்கு முக்கியமானது. வேறு எந்த அரசியல் தலைவர்களை விடவும் அவர் இதில் முத்திரை பதித்துள்ளார். மேலும் ஐந்து தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று 21 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக் ஹாக்கி அணியின் மீது வைத்துள்ள நம்பிக்கை மூலம் ஒடிசாவையும் இந்தியாவையும் பெருமைப்படுத்தி உள்ளார்.
2018ஆம் ஆண்டில் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்தியதுபோலவே வரும் 2023ஆம் ஆண்டிலும் உலககோப்பையை ஒடிசா நடத்த உள்ளது. கலிங்கா ஸ்டேடியம் கடந்த பல ஆண்டுகளாக தேசிய ஹாக்கி அணியின் இல்லமாக மாறியுள்ளது. ஒடிசாவின் பழங்குடிகளுக்கு பிடித்த விளையாட்டாக ஹாக்கி இருந்துவரும் நிலையில், சுந்தர்கர் போன்ற மேற்கு மாவட்டங்கள் ஹாக்கி விளையாட்டின் தொட்டிலாக அறியப்படுகிறது. காசரஸ் பர்லா, திலீப் டிர்கி போன்ற திறமையான வீரர்கள் அங்கிருந்த்தான் வந்துள்ளனர். கடலோர ஒடிசாவில் கூட செயற்கை புல்வெளிகள் அமைக்கப்பட்டு உலகின் முன்னணி ஹாக்கி மையங்களாக அவை விளங்குகின்றன.