டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுத் திரும்பிய வீரர் வருகின்ற 15 ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் விருந்தினர்களாக இவர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்வின்போது பிரதமர் வீரர்களுடன் கலந்துரையாடுவார். அதன்பிறகு பிரதமர் இல்லத்தில் ஒலிம்பிக் வீரர்களுக்கான சிறப்பு விருந்திலும் அனைவரும் பங்கேற்க உள்ளனர். 





முன்னதாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு காணொளியில் சந்தித்தார் பிரதமர் மோடி. இவர்களில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ஐஸ் க்ரீம் சாப்பிட அழைப்பு அவர் விடுத்திருந்தார். பி.வி.சிந்து தனது பெற்றோருடன் காணொளி வழியாக பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி. ரியோ ஒலிம்பிக் போட்டி சமயத்தில் பி.வி.சிந்து தனது போனை உபயோகிப்பதற்கும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கும் முழுவதுமாக தடைவிதித்திருந்தார் அவருடைய பயிற்சியாளர் புல்லெல்லா கோபிசந்த். ‘ஐஸ்க்ரீம் சாப்பிட இப்போதும் உங்களுக்கு அனுமதி இல்லையா?’ என நகைச்சுவையாகக் கேட்டார் பிரதமர். அதற்கு பதிலளித்த சிந்து, தனது விளையாட்டுப் பயிற்சிக்கான டயட் காரணமாக ஐஸ்க்ரீம் மிகவும் அரிதாகவே சாப்பிடுவதாகச் சொன்னார் அவர். அதற்கு மறுபதிலளித்த பிரதமர் சிந்து டோக்கியோவிலிருந்து திரும்பியதும் அவரைத் தன்னுடன் ஐஸ்க்ரீம் சாப்பிட அழைப்பு விடுத்துள்ளார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு தடகளப் போட்டியாளர்களின் வாழ்க்கை பற்றியும் தனது ஆன்லைன் சந்திப்பில் பகிர்ந்தார் பிரதமர்.   

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் பிவி சிந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வெற்றிபெற்றதை அடுத்து பிரதமர் விடுத்த அழைப்பின்படி அவருடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொருபக்கம், டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. அதில் இந்திய மகளிர் அணி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியது. தொடக்க முதலே ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு மிகவும் சவால் அளித்தது. இறுதியில் 1-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மற்றொரு பக்கம் ஆடவர் ஹாக்கி அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் பட்டாளம் சுதந்திரதினத்தன்று கொண்டாட்டமாகப் பிரதமரைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.