பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீ ஓட்டப் பந்தயத்திற்கான இறுதிப்போட்டி நேற்று(ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் வெற்றி பெற்றார். அதன்படி முதல் 30 மீட்டர் வரை நோவா லைல்ஸ் 8 வது இடத்தில் தான் ஓடிக்கொண்டிருந்தார்.
ஆனால் அடுத்த 70 மீட்டரில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தினார். அதாவது பந்தய தூரத்தை 9.79 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். உலக தடகள வரலாற்றில் அதிவேக வீரர் என்ற பெருமையை பெற்றார் நோவா லைல்ஸ்.
யார் இந்த நோவா லைல்ஸ்?
கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தவர் நோவா லைல்ஸ். இவரது தந்தை கெவின் லைல்ஸ்முன்னாள் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர். இவரது தாயாரும் தடகள வீராங்கனை தான். அதனால் இவருக்கும் சிறுவயதில் இருந்து ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் வரை 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் என்றாலே உசேன் போல்ட் தான் என்ற நிலைதான் இருந்தது. இதனால் மீண்டும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஓட்டப்பந்தயத்தில் நிறுவ வேண்டும் என்ற வெறி நோவா லைல்ஸ்க்கு ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி 2017 ஆம் ஆண்டு உசேன் போல்ட் ஓய்வை அறிவித்தை தனக்கு சாதகமாக மாற்றியுள்ளார். இப்படி தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சி மூலம் தான் இன்றைக்கு உலகின் வேகமான வீரர் என்ற சாதனையை நோவா லைல்ஸ் படைத்திருக்கிறார்.
நிற வெறிக்கு எதிரானவர்:
அமெரிக்க கருப்பினத்தை சேர்ந்தவரான இவர் நிற வெறிக்கு எதிராக தன்னுடைய கருத்தை சொல்ல எப்போதும் தவறியது இல்லை. விளையாட்டுப் போட்டிகளின் போது கருப்பு நிற கையுறைகளை அணிந்து விளையாடுவது அதோடு நிற வெறிக்கு எதிராக பாடல்கள் பாடுவது என்று எப்போதும் நிற வெறிக்கு எதிராக நின்றிருக்கிறார். ஒருமுறை தான் இயக்கிய பாடல் வெளியீட்டின் போது "எந்தக்காரணமும் இல்லாமல் நான் கொல்லப்பட்ட செய்தியை நீங்கள் நாளை கேட்கக்கூடும்.
அதற்காக கொஞ்ச மக்கள் கவலை படுவார்கள். ஆனால்,அதற்காக எங்களது போராட்டாம் முடிந்து விடாது.கொல்லப்பட்டவனாக நான் ஒருவன் மட்டுமே இருக்க மாட்டேன். இனியும் இது நடக்கும். இன்னொருவருக்கு இன்னொருவர் என்று கொல்லப்பட்டு கொண்டே தான் இருப்போம். ஆனால் நிற வெறியை முழுமையாக ஒழிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான் தன்னுடைய வெற்றியின் மூலம் அனைவரும் இந்த பூமியில் சமமானவர்கள் தான் என்று கூறியுள்ளார்.