பாரீஸ் ஒலிம்பிக் 2024:


விளையாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, யூரோ கோப்பை மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் காத்திருக்கும் மற்றொரு முக்கியமான தொடர் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தான்.


ரசிர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இச்சூழலில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


பிருத்விராஜ் தொண்டைமான்:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் தான்  பிருத்விராஜ் தொண்டைமான். ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். தனி நபர் மூலம் இந்தியவிற்கு முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான்.


இதனால் இந்த முறை பிருத்விராஜ் தொண்டைமான் பதக்க வேட்டையில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 10 வருடங்களுக்கு மேலாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருக்கும் பிருத்விராஜ் கடந்த முறை நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இளவேனில் வாலறிவன்:


தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர் இளவேனில். பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் பங்கேற்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இவர் களம் கண்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.


இச்சூழலில் தான் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாட காத்திருக்கிறார். இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ககன் நரங்கிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுபா வெங்கடேசன்:


24 வயதான சுபா வெங்கடேசன் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். சுபா வெங்கடேசன் 2023ல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலப்பு 4*400 ரிலே ஓட்டத்திலும், மகளிர் 4*400 ரிலே ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர். இச்சூழலில் தான் இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 4*400 ரிலே ஒட்டத்தில் களம் காண்கிறார்.


12 ஜூன், 2024ல் பெங்களூருவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் 52.34 விநாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இது போன்ற தன்னுடைய சிறப்பான செயல்பாடுகள் மூலம் கவனிக்கப்படும் வீராங்கனையாக உருவெடுத்திருக்கிறார் சுபா வெங்கடேசன்.


வித்யா ராம்ராஜ்:


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் லாரி ஓட்டுநரின் மகள் ஆவார். 100.மீ, 400.மீ, 400.மீ தடை தாண்டும் ஓட்டம், 4*400 ரிலே, கலப்பு 4*400 ரிலே ஓட்டத்தில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார்.  2023ல் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முன்னாள் வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையை சமன் செய்தார்.


55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 4*400 ரிலே ஓட்டத்தில் பங்கேற்பதால் இந்த முறை பதக்கத்துடன் நாடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


சரத் ​​கமல்:


இந்தியாவின் ஏஸ் டேபிள் டென்னிஸ் வீரரான ஷரத் கமல், பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை ஏந்தி, தனது ஐந்தாவது மற்றும் இறுதி ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ளார். உலக தரவரிசையில் 88-வது இடத்தில் உள்ள இவர் 10 தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.


அதேபோல், காமன்வெல்த் போட்டியில் ஏழு தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களையும், உலக சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை வெண்கலப் பதக்கம் வென்றவர். இப்படி பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இவர் இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.