Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் வில்வித்தை போட்டியின் முந்தைய உலக சாதனையை, தென்கொரியாவைச் சேர்ந்த 21 வயதான லிம் சிஹியோன் அறிமுக போட்டியிலேயே முறியடித்துள்ளார்.
வில்வித்தையில் உலக சாதனை:
2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தை தகுதிச் சுற்று போட்டிகள், பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று தொடங்கியது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், மகளிர் தனிநபர் பிரிவில் உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் லிம் சிஹியோன், தனிநபர் பிரிவில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நபர் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் தனிநபர் தரவரிசை சுற்றில், இதுவரை இல்லாத சிறந்த ஸ்கோரை பதிவு செய்ததன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை இடம்பெறச் செய்துள்ளார்.
21 வயதில் அசத்திய லிம் சிஹியோன்:
21 வயதான லிம் சிஹியோன், தகுதிச்சுற்று போட்டியில் 694 புள்ளிகளை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில், அதே தென்கொரியாவைச் சேர்ந்த சேயோங் காங்கை, தனிநபர் தகுதிச் சுற்று போட்டியில் 692 புள்ளிகளை சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை, ஒலிம்பிக்கில் தான் களம் கண்ட முதல் போட்டியிலேயே லிம் சிஹியோன் முறியடித்துள்ளார்.
யார் இந்த லிம் சிஹியோன்:
கடந்த 2003ம் ஆண்டு ஜுன் 13ம் தேதி பிறந்த லிம் சிஹியோன், பாரிஸ் ஒலிம்பிக்கில் போட்டியிடும் இளம் வயது வில்லாளிகளில் ஒருவர். தென்கொரியா எப்போதுமே உலகத் தரம் வாய்ந்த வில்வித்தை வீரர்களை தயார் செய்வதில் முதன்மையான நாடாக உள்ளது. ஆசியப் விளையாட்டு போட்டிகளில் பல ஆண்டுகளாக அந்நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு மற்றொரு சான்றாக வந்திருப்பவர் லிம் சிஹியோன். லிம் ஏற்கனவே வில்வித்தை போட்டியில் ஒரு சூப்பர் ஸ்டாராக உள்ளார். காரணம் அவர் சமீபத்தில் யெச்சியோன் 2024 வில்வித்தை உலகக் கோப்பை நிலை இரண்டில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் 2024 இல் ஷாங்காய் வில்வித்தை உலகக் கோப்பை நிலை ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரியர் நடப்பாண்டில் மட்டும் தங்கப் பதக்கங்களை வெல்லவில்லை. ஏற்கனவே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக உள்ளார், 2022 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றதோடு, 2023 ஆம் ஆண்டில் ஷாங்காய் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 1ல் இரட்டை தங்கம் வென்று, உலக அரங்கில் தனது பயணத்தை தொடங்கினார்.