ஒலிம்பிக் தொடர் பாரிசில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒலிம்பிக் தொடர் முதல் நாடற்றவர்களுக்காக நாடற்றவர்களின் அணி அதாவது அகதிகள் அணி என்ற உலகெங்கிலும் அகதிகளாக வசிப்பவர்கள் பங்கேற்று வருகின்றனர்.


தகுதி நீக்கம்:


நடப்பு ஒலிம்பிக்கில்  முதன்முறையாக பிரேக்கிங் டான்ஸ் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் அகதிகள் அணி சார்பில் மணிஷா தலாஷ் என்ற நடன கலைஞர் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். இவர் தற்போது ஸ்பெயினில் வசித்து வருகிறார். ஒலிம்பிக் ப்ரேக் டான்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று நேற்று நடந்தது.


இதில் மணிஷா தலாஷ் பங்கேற்றவர். அவர் அப்போது ஆப்கான் பெண்களுக்கு விடுதலை என்ற வாசகம் அணிந்த உடையும், தொப்பியும் அணிந்திருந்தார்.  ஒலிம்பிக் விதிகளை மீறும் விதமாக செயல்பட்டதாக கூறி மணிஷா தகுதி நீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.  21 வயதான மணிஷாவை தகுதிநீக்கம் செய்வதாக உலக நடன விளையாட்டு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஆப்கான் வீராங்கனை:


இந்தியாவின் வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகளுக்கான வாசகத்தை ஏந்திய நடன வீராங்கனையை தகுதிநீக்கம் செய்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலைப் பூர்வீகமாக கொண்டவர் மணிஷா. தன்னுடைய ப்ரேக் டான்ஸ் திறமையால் 18 வயதிற்கு முன்பே இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். ஸ்பெயினில் தஞ்சம் அடைந்த பிறகு தனது ப்ரேக் டான்ஸ் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தலிபான்கள் ஆட்சி:


ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் மிக அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது கல்வி உள்பட அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.


பல நாடுகளும் தலிபான்களின் இந்த கட்டுப்பாட்டிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் இங்கிலாந்து, ஸ்பெயின் என வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.