பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தது நீரஜ் சோப்ராவையே ஆகும். ஈட்டி எறிதலில் இந்தியாவிற்காக கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவருக்கு பாகிஸ்தான் வீரர் சவால் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.


தங்கமகன் அர்ஷத்:


நடப்பு ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை காட்டிலும் அதிக தொலைவிற்கு ஈட்டியை வீசி தங்கம் வென்று அசத்தினார். நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். பாகிஸ்தான் வரலாற்றிலே ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் அர்ஷத் நதீம் படைத்தார்.


92.97 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை வீசிய அர்ஷத்தை பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். நதீமிற்கு பாராட்டு மழை மட்டுமின்றி பரிசு மழையும் பாகிஸ்தானில் கொட்டி வருகிறது. நதீமிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய். 4.5 கோடி பரிசு அளிக்கப்பட உள்ளது.  இது மட்டுமின்றி பாகிஸ்தான் மாநிலத்தில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் மர்யம் நவாஸ் இந்திய மதிப்பில் ரூபாய் 3 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.


பரிசும், புகழும்:


மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் ஆளுநர் சர்தார் சலீம் ஹைதர்கான் 6 லட்சம் ரூபாய்( இந்திய மதிப்பில்) அறிவித்துள்ளார். சிந்து மாநில முதலமைச்சர் நதீம் இந்திய மதிப்பில் ரூபாய் 1.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரபல பாடகர் அலி ஜாஃபர் அந்த நாட்டின் தங்கமகன் அலி ஜாஃபரிடம் 3 லட்சம் ரூபாய்( இந்திய மதிப்பில்) பரிசுத்தொகை அளிப்பதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர் அகமது ஷாஷாத்தும் அந்த நாட்டின் தங்கமகன் அர்ஷத்திற்கு ரூபாய் 3 லட்சம் ( இந்திய மதிப்பில்) அன்பளிப்பதாக தருவதாக கூறியுள்ளார்.


பண மதிப்பிலான இந்த பரிசுத்தொகை மட்டுமின்றி அந்த நாட்டின் பல்வேறு உயரிய விருதுகளும் அர்ஷத்திற்கு வழங்கப்பட உள்ளது. அந்த நாட்டின் உயரிய விருது தங்கம் வென்ற அர்ஷத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கப்பதக்கத்துடன் பாகிஸ்தான் திரும்ப உள்ள அர்ஷத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் அரசும், ரசிகர்களும் திட்டமிட்டுள்ளனர். கராச்சி மேயர் முர்டசா வகாப் அர்ஷத் நதீம் பெயரில் தடகள அகாடமி ஒன்று தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


புதிய வரலாறு:


கடந்த ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்து எந்த பதக்கமும் வெல்ல முடியாத அர்ஷத் இந்த ஒலிம்பிக்கில் அபாரமாக செயல்பட்டு தங்கத்தை தனதாக்கினார். மேலும், அவர் எறிந்த 92.97 மீட்டர் தொலைவானது ஒலிம்பிக் தொடரில் புதிய வரலாறு என்பதும் குறிப்பிடத்தக்கது. அர்ஷத் நதீம் பதக்கம் வென்றதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.