பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டாம் நாளான இன்று பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். 


பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பிரான்ஸில் நேற்று முன் தினம் பிரமாண்டமாக தொடங்கியது 33 வது பாரீஸ் ஒலிம்பிக் தொடர். இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அதே சமயம் ஹாக்கி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. 


பி.வி.சிந்து வெற்றி:


இந்நிலையில் தான் இன்று (ஜூலை 28) நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் அவர், மாலத்தீவு வீராங்கனை பாத்திமா அப்துல் ரசாக்கை எதிர்கொண்டார். அதில், மாலத்தீவு வீராங்கனையை 21-9, 21-6 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்தியா சார்பில் சிந்து பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.