பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக்கில் வருகின்ற ஜூன் 27ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஜப்பானில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஹர்மன்ப்ரீத் சிங்-க்கு இது மூன்றாவது ஒலிம்பிக்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வருகின்ற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவிருக்கும் பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 16 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா இன்று அறிவித்தது.
ஏஸ் டிராக் ஃப்ளிக்கர் மற்றும் டிஃபெண்டர் ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டனாகவும், மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் ஒலிம்பிக் புதிதாக 5 வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்குக்கு இது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாகும். 2016 ரியோ ஒலிம்பிக்கில் அறிமுக வீரராகவும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற அணியிலும் ஹர்மன்ப்ரீத் சிங் இடம் பிடித்திருந்தார்.
அதேபோல், அனுபவ கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் மற்றும் மிட்லீல்டர் மன்ப்ரீத் சிங் ஆகியோருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
டிபெண்ட் வரிசையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், சுமித் மற்றும் சஞ்சய் ஆகியோர் அடங்குவர், அதே சமயம் மத்திய களத்தில் ராஜ் குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங் மற்றும் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மன்தீப் சிங், மற்றும் குர்ஜந்த் சிங் போன்ற வலிமைமிக்க வீரர்கள் ஃபார்வர்ட் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஜர்மன்ப்ரீத் சிங், சஞ்சய், ராஜ் குமார் பால், அபிஷேக் மற்றும் சுக்ஜீத் சிங் ஆகிய ஐந்து வீரர்கள் பாரிஸில் ஒலிம்பிக்கில் அறிமுகமாக உள்ளனர்.
மேலும், கோல்கீப்பர் கிரிஷன் பகதூர் பதக், மிட்ஃபீல்டர் நீலகண்ட சர்மா மற்றும் டிஃபென்டர் ஜக்ராஜ் சிங் ஆகியோர் ரிசர்வ் விளையாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.