ஒலிம்பிக் சீசன் இது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என எந்தப் பதக்கம் கிடைத்தாலும், எத்தனை பதக்கங்கள் கிடைத்தாலும் அந்தந்த நாட்டு ரசிகர்களுக்கு அது கொண்டாடம் கலந்த பெருமைமிக தருணம்தான்.18 விளையாட்டுகளைச் சேர்ந்த இந்திய வீரர் வீராங்கனைகள் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று வருகின்றனர். இதில், 130 கோடி இந்திய மக்களும் மேரி கோம், பிவி சிந்து தீபிகா குமாரி போன்ற உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.


அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்து, இம்முறை வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா திரும்ப உள்ளார். சவாலான குத்துச்சண்டை போட்டியில், தனது 38 வயதிலும் எதிரணி வீராங்கனைகளுக்கு டஃப் கொடுத்து கொடுத்தார் மேரி கோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்த ஐந்து வருடங்களாக சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் பதக்க கனவை மட்டும் துரத்தி வந்த மீராபாய் சானு, இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்த செல்ல மகளானார்.  இப்படி, இந்த வீராங்கனைகளை கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில், அசாமைச் சேர்ந்த லோவ்லினா இந்தியாவுக்காக இன்னொரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.



ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி. 2000-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வரலாற்று சாதனை நடந்து கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த காலக்கட்டத்தில் வெவ்வேறு விளையாட்டுகளில் இந்தியாவுக்காக வீராங்கனைகள் பதக்கம் வென்று தந்து உள்ளனர். 


கர்ணம் மல்லேஷ்வரியை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக் பதக்கம் வென்றது 2012-ம் ஆண்டில்தான். இந்திய வீராங்கனைகளுக்கு நம்பிக்கை அளித்தது மட்டுமின்றி, பேட்மிண்டன் பக்கம் இளம் வீரர் வீராங்கனைகளை அழைத்துச் சென்றது சாய்னா நேவால்தான். 2012 ஒலிம்பிக்கில் வெண்லகப் பதக்கம் வென்றார் சாய்னா நேவால். 


ஏற்கனவே, சர்வதேச அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனக்கான ஒரு இடத்தை பதிவு செய்திருந்த மேரி கோமிற்கு, 2012 ஒலிம்பிக்கின்போது ஒலிம்பிக் பதக்கமும் தன்வசம் வந்து சேர்ந்தது. அடுத்ததாக, ஒலிம்பிக் வரலாற்றில், மல்யுத்தம் விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் முறை பதக்கம் வென்று கொடுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக். 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தது. இந்த இரண்டு பதக்கங்களையும் இந்திய வீராங்கனைகள் இந்தியா கொண்டு வந்தனர். சாக்‌ஷி மாலிக்கிற்கு வெண்கலும், பிவி சிந்துவிற்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது. 






குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்ற தனிநபர் விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கின்றனர். எனினும், ஃபென்சிங், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், தடகளம் போன்ற மற்ற விளையாட்டுகளிலும் இந்திய வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளின் ஃபோடியம்களில் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த விளையாட்டுகளிலும் முத்திரை பதித்து வரும் இந்திய வீராங்கனைகள், அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர்களில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்பதில் அனைவரின் நம்பிக்கையும் பெற்றுள்ளனர். 



இந்நிலையில்தான், ”இந்தியாவில் மட்டும்தான் திருமணம் என்றாலும், ஒலிம்பிக் என்றாலும் மகளிர்தான் தங்கம் கொண்டு வர வேண்டியுள்ளது” என சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்படுவதை காண முடிந்தது. ஆனால், இந்த கமெண்ட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் வீராங்கனைகள் செவி மடுக்கப் போவதில்லை. பயிற்சி பெறுவது, தேசிய, சர்வதேச அளவிலான தொடர்களில் பங்கேற்று அனுபவம் பெறுவது, உதவித் தொகை பெறுவது, விளையாட்டு கோட்டாவில் வேலை பெறுவது என இங்கு பெரும்பாலான சலுகைகள் வீரர்களுக்கு கிடைப்பது போல வீராங்கனைகளுக்கு கிடைப்பதில்லை என்பது கசப்ப்பான உண்மை.


பொருளாதார சிக்கல்களையும் தாண்டி, வீட்டை விட்டு வெளியேறி ஃபோடியம் ஏறுவது இந்திய பெண்களுக்கு போராட்டமாக இருந்து வருகிறது. இந்நேரத்தில், சமூக வலைதளங்களிலும் பிற்போக்கான கருத்துகளுக்கு வழிவிடாமல், உற்சாகமும், ஆதரவும் மிக முக்கியமாக அங்கீகாரமும் கிடைத்தால், இன்னும் பல ஃபோடியம்களில் இந்திய வீராங்கனைகள் ஏறி வெல்வார்கள். சமூக வலைதள கருத்துகள் தீயாக பரவுவதும், அதுவே உண்மை என பலரும் நம்புவதும் இங்கு வழக்கமாகிவிட்டதால், பொறுப்புணர்வோடு நம் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. 


’இது பெண்களுக்கான விளையாட்டு இல்லை’ என இனி எதுவும் இல்லை. அந்தந்த விளையாட்டுகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற வீராங்கனைகள் இப்போது அதே விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களாகவும், நடுவர்களாகவும் சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை கொண்டு சேர்த்து வருகின்றனர். இதுவரை, ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் தங்கம் வெல்லவில்லை என்றாலும், இதுவரை வென்ற, இனி வெல்லப்போகும் ஒவ்வொரு வீராங்கனையும் தங்கங்களே!