டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளன. இதில் இந்தியா சார்பில் 119 வீரர் வீராங்னைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 67 வீரர்களும், 52 வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்திய வீரர் வீராங்கனைகள் மொத்தம் 85 பதக்க வாய்ப்பிற்கு போட்டி போட உள்ளனர். இந்தச் சூழலில் வீரர் வீராங்கனைகளை போல் இந்தியாவை சேர்ந்த ஒருவர் போட்டியின் நடுவராக தேர்வாகி உள்ளார். யார் அவர்? எந்தப் போட்டியில் நடுவராக தேர்வாகியுள்ளார்?


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற உள்ள ஆடவர் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு இந்தியர் ஒருவர் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தீபக் கப்ரா என்பவர் நடுவராக தேர்வாகியுள்ளார். இவர் தன்னுடைய 12-வது வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். அது மிகவும் தாமதமான வயது என்பதால் இவரால் சர்வதேச அளவில் இதில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இருந்த போதும் 2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில சாம்பியனாக இருந்து வந்தார். 




அதன்பின்பு தன்னுடைய பயிற்சியாளரின் அறிவுரையை ஏற்று ஜிம்னாஸ்டிக் போட்டி நடுவராக முயற்சி செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு இதற்கான பயிற்சியில் சேர்ந்துள்ளார். அதை வெற்றிகரமாக முடித்து 2010 காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக நடுவராக பணியாற்றினார். 2014ஆம் ஆண்டு ஆசிய போட்டிகள் மற்றும் யூத் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் ஆகியவற்றில் நடுவராக இருந்தார். இதுபோன்ற பல முக்கியமான போட்டிகளில் நடுவராக பணியாற்றி வந்தார். 


இது தொடர்பாக தீபக் கப்ரா, “நான் மிகவும் தாமதமாக ஜிம்னாஸ்டிக் விளையாட்டை தேர்வு செய்தேன். அதனால் என்னால் வீரராக பெரிதாக சாதிக்க முடியவில்லை. இதன் காரணமாக நடுவராக பணியாற்ற விரும்பினேன். அதன்படி கடந்த 12 ஆண்டுகளாக சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் நடுவராக இருந்து வருகிறேன். ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வாக 12 ஆண்டுகள் சர்வதேச நடுவராக இருந்திருக்க வேண்டும். எனக்கு சரியாக 12 ஆண்டுகள் முடிந்த பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் கூறினார். 




இவரின் நடுவர் தேர்வை பாராட்டி இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபார் கர்மாகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். கடந்த ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா கர்மார்கர் 4ஆவது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் நூல் இழையில் தவறவிட்டார். இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 26 வயதான பிரணிதி நாயக் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்க உள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு ஆசிய ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். தீபா கர்மார்கர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறவில்லை. 


மேலும் படிக்க: 9 நாட்களில் டோக்கியோ ஒலிம்பிக்: பளுதூக்குதல் பிரிவில் சாதிப்பாரா சானு?