இந்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில், இந்தியா சார்பாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்திய கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர்.
2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இதுவரை ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் இந்திய ஹாக்கி அணி வீரர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்திய கொடியை ஏந்திச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழாவிற்கு, மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மேரி கோம், “டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த வாய்ப்பு கொடுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்புக் சங்கம், பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன்” என்றார்
2016-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தொடரின்போது, துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா இந்திய கொடியை ஏந்திச் சென்றார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் நிறைவு விழாவின்போது மேரி கோம் இந்திய கொடியை ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, 126 போட்டியாளர்கள், 75 விளையாட்டு அதிகாரிகள் என மொத்தம் 201 பேர் இந்தியா சார்பாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக ஜப்பான் செல்ல உள்ளனர்.