சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்துள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ வில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் என்று சாதனை படைத்தார். 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் பாரிசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழக வீரர் மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.



இதனிடையே பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு முதல்முறையாக சொந்த ஊருக்குத் திரும்பிய தங்கவேலு மாரியப்பனுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவட்டிப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பாரா ஒலிம்பிக் வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதனையடுத்து, மாரியப்பனின் தாயார் சரோஜா மற்றும் குடும்பத்தினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். ஊர் பொதுமக்கள் சார்பில் மாரியப்பனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். தீவட்டிப்பட்டியில் இருந்து ஜீப்பில் மேல் நின்றபடி பாரா ஓலிம்பிக் பதக்கத்துடன் மாரியப்பன், சொந்த ஊருக்கு பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றார்.



முன்னதாக பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்தியாவிற்காக மூன்று முறை பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. சொந்த ஊரில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை அளிக்கிறது. இம்முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில் அடுத்த முறை நிச்சயமாக தங்கப் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் மிக சுலபமாகத் தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. சீதாஷ்ண நிலை எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் தங்கம் தவறிவிட்டது. அடுத்த முறை நிச்சயம் தவறாது. நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன். உலக தடகளப் போட்டிகள், ஆசியப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதே அடுத்த இலக்கு" என்று பாரா ஒலிம்பிக் வீரர் தங்கவேலு மாரியப்பன் தெரிவித்தார்.