Paris Olympics 2024 India Performance:  பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக இந்தியா 6 பதக்கங்களை மட்டுமே வென்று, கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


ஒலிம்பிக்கும்.. இந்தியாவின் பங்கும்..!


இந்தியா தனது ஒலிம்பிக் பயணத்தை 1900 இல் நார்மன் பிரிட்சார்டுடன் தொடங்கியது. மற்ற போட்டிகளில் பெரிதாக சோபிக்காவிட்டாலும், ஹாக்கியில் மட்டும் இந்திய ஆடவர் அணி தொடர்ந்து கோலோச்சி வந்தது. 1928 மற்றும் 1980 க்கு இடைபட்ட காலகட்டத்தில் 12 பதக்கப் போட்டிகளில் 11 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 8 தங்கப் பதக்கங்கள் அடங்கும், அவற்றில் ஆறு 1928 முதல் 1956 வரை தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டவை ஆகும். அதன்பிறகு, இந்திய அணியால் ஹாக்கியில் பிரிவில் கூட, ஒலிம்பிக்கில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றது. அந்த ஒலிம்பிக்கில், நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கம் உட்பட இந்தியாவிற்கு மொத்தமாக 7 பதக்கங்கள் கிடைத்தன.


பாரிஸ் ஒலிம்பிக் 2024:


நீரஜ் சோப்ரா தந்த உற்சாகத்தால் டோக்கியோ ஒலிம்பிக்கை காட்டிலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்ல இந்தியா முனைப்பு காட்டியது. இதற்காக வெற்றி வாய்ப்புள்ள அதிகமுள்ள வீரர்களை தேர்வு செய்து, பிரத்யேக பயிற்சியும் அளித்தது. அதன் முடிவில்,  117 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு  நம்பிக்கையுடன் அனுப்பப்பட்டனர். ஆனால், தற்போது வரை ஆறு பதக்கங்கள் மட்டுமே இந்தியாவின் கணக்கில் வந்துள்ளன. இதில் ஐந்து வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் அடங்கும். இம்முறை ஒரு தங்கப் பதக்கம் கூட இல்லை.


பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்காக இந்திய அரசு ரூ.470 கோடி செலவிட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் நாட்டிற்காக பதக்கங்களை வெல்லும் வகையில் வீரர்களுக்கு சிறந்த பயிற்சி, உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்க இந்த பணம் செலவிடப்பட்டது. ஆனால், அதன் மீதான எதிர்பார்ப்புகளுக்கு பலன் கிடைத்ததா என்றால்? இல்லை என்பதே பதிலாக உள்ளது.


ஹாக்கிக்கான ஒடிசா அரசின் செலவு:


ஒடிசா அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஹாக்கிக்கு நிதியுதவி அளித்து வருகிறது. அந்த  ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் 2036ம் ஆண்டு வரை  அண்மையில் நீட்டிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஹாக்கி அணி பயிற்சி பெற்றது. பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக மட்டுமே இந்திய ஹாக்கி அணிக்கு விளையாட்டு அமைச்சகம் ரூ. 41.81 கோடி செலவிட்டது. இந்திய அரசு 76 தேசிய முகாம்கள் மற்றும் 36 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்தது, இதில் 33 முக்கிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அதன் பலனாக வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.


ஏமாற்றம் தந்த பேட்மிண்டன்:


ஒலிம்பிக்கிற்காக பேட்மிண்டன் பிரிவுக்காக இந்திய அரசு 72.03 கோடி செலவிட்டுள்ளது. இந்த பணத்தில் 7 பேட்மிண்டன் வீரர்கள் தயார் செய்யப்பட்டனர். அவர்கள் 13 தேசிய மற்றும் 81 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி.வி.சிந்து, லக்‌ஷயா சென், சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் பதக்கங்களை வெல்லாம் ஏமாற்றம் தந்தனர்.


மீராபாய் சானு :


டோக்கியோவில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, பாட்டியாலாவில் ரூ. 2.74 கோடி செலவில் பயிற்சி பெற்றார். ஆனால், அவரும் இந்த முறை பதக்க வாய்ப்பை இழந்தார்.


அதிக தொகையை பெற்ற தடகளம்:


16 வெவ்வேறு விளையாட்டுகளுக்காக செலவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தடகளப் போட்டிகளுக்கு அதிகபட்சமாக ரூ.96.08 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த பணத்தில் 29 விளையாட்டு வீரர்கள் தயார் செய்யப்பட்டனர். பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராவதற்கு 36 தேசிய முகாம்கள் மற்றும் 85 வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் நடத்தப்பட்டன. இவர்களில் நீரஜ் சோப்ரா மட்டுமே ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


வில்வித்தைக்கு குவிந்த நிதி:


வில்வித்தை வீரர்களுக்காக ரூ.39.18 கோடி செலவிடப்பட்டது. 41 தேசிய முகாம்கள் மற்றும் 24 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதில் 5 முன்னணி வீரர்கள் மற்றும் 13 வளர்ந்து வரும் வீரர்கள் சிறப்பு கவனம் பெற்றனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் தருண்தீப் ராய் மற்றும் தீபிகா குமாரி மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், வில் வித்தை பிரிவு மொத்தமாக ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.


துப்பாக்கிச் சுடுதல்:


துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்காக 60.42 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில், 21 வீரர்களை தயார்படுத்த அரசு முழு உதவி செய்தது. மொத்தம் 96 வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மற்றும் 45 தேசிய முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் விளைவாக இந்தியாவிற்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மூன்று வெண்கல பதக்கங்கள் கிடைத்தன.


பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்கள்:



  • மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்

  • 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது

  • 50 மீட்டர் ரைபிள் 3 பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார்

  • இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

  • ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்

  • ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்தப் பிரிவில் அமன் செஹ்ராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.


கூட்டு வெள்ளி பதக்கத்திற்கான வினேஷ் போகத்தின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு வரும் 13ம் தேதி வெளியிடப்பட உள்ளது.


பாகிஸ்தானுக்கு கீழே சரிந்த இந்தியா: 


2024 ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான விட பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.  பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 71வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் ஒரு தங்கப் பதக்கத்துடன் 62வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானை விட இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருந்தாலும், தங்கப் பதக்கம் வென்றதன் அடிப்படையில் தரவரிசையில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்த மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், ஒரு வெண்கல பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தகக்து.


அணிகளுக்கான நிதி ஒதுக்கீடு பின்வருமாறு:



  • வில்வித்தை அணி: ரூ. 39.18 கோடி

  • தடகளம்: ரூ. 96.08 கோடி

  • பேட்மிண்டன்: ரூ.72.03 கோடி

  • குத்துச்சண்டை: ரூ. 60.93 கோடி

  • குதிரையேற்றம்: ரூ. 95.42 லட்சம்

  • கோல்ஃப்: ரூ. 1.74 கோடி

  • ஹாக்கி: ரூ. 41.30 கோடி

  • ஜூடோ: ரூ. 6.33 கோடி

  • படகோட்டம்: ரூ. 3.89 கோடி

  • படகோட்டம்: ரூ. 3.78 கோடி

  • துப்பாக்கிச் சுடுதல்: ரூ. 60.42 கோடி

  • நீச்சல்: ரூ. 3.90 கோடி

  • டேபிள் டென்னிஸ்: ரூ. 12.92 கோடி

  • டென்னிஸ்: ரூ. 1.67 கோடி

  • பளு தூக்குதல்: ரூ. 27 கோடி

  • மல்யுத்தம்: ரூ. 37.80 கோடி