ஒலிம்பிக் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தொடரின் துவக்க விழாவிற்காக டோக்கியோ நகரம் தயாராகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் தொடரை நடத்தி முடிக்க ஒலிம்பிக் அமைப்பு முடிவு செய்துள்ளது.
போட்டியில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர் வீராங்கனைகள் தங்கி இருக்கும் பகுதிகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டில் தரமற்றதாக இருப்பதாக தகவல் வெளியானது.
கொரோனா பரவல் ஆபத்து இருக்கும் சூழலில், வீரர் வீராங்கனைகள் அனைவரும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியும், உடலுறவு வைத்துக்கொள்வதை தடுக்கும் விதமாகவும் அவர்களுக்கு கார்ட்போர்டினால் தயாரிக்கப்பட்ட கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது.
அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் பால் செலிமோ, தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து முதன்முதலாக பதிவு செய்திருந்தார். ”ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் வீரர் வீராங்கனைகள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், ஸ்லீப் ஓவர் செய்யாமல் இருக்கவும் கார்ட் போர்டினால் தயாரான கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரின் எடையை மட்டும் தாங்கும் அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது” என பதிவு செய்திருந்தார்.
இந்த போஸ்ட் வெளியான சில மணி நேரங்களிலே வைரவலானது. இந்த பதிவு குறித்த எதிர்மறையான கருத்தை இன்னொரு விளையாட்டு வீரர் பதிவு செய்திருந்தார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் ரைஸ் மெக்ளனகன், கட்டில்கள் தரமாக இருப்பதாகவும், கார்ட் போர்டு கட்டில் போன்ற தரத்தில் இல்லை எனவும் பதிவிட்டிருந்தார். கட்டில் மீது ஏறி குதித்து வீடியோவும் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவினை ஒலிம்பிக் சங்கம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. ஏர்வீவ் என்ற நிறுவனம்தான் ஒலிம்பிக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டில்களை தயாரித்து வருகின்றது. ஒவ்வொரு படுக்கையும் 200 கிலோ எடையைத் தாங்கக் கூடியது என தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு தரமான கட்டில்கள்தான் வழங்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உடலுறவு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதே போல, எச்.ஐ.வி எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, 1988-ம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ’காண்டம்’ வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரின்போதும் வீரர் வீராங்கனைகளுக்கு காண்டம்கள் வழங்கப்படுகிறது. கடைசியாக நடைபெற்ற 2016 ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் அதிகபட்சமாக 4,50,000 காண்டம்கள் வழங்கப்பட்டது. தோராயமாக, ஒவ்வொரு வீரருக்கும் 42 காண்டம்கள் வீதம் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்தவர்களுக்கு காண்டம்கள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரின்போது, கொரோனா பரவல் பாதிப்பை கட்டுப்படுத்த, வீரர் வீராங்கனைகள் கை குலுக்குவது போன்ற செயல்களை தவிர்த்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவு, இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா புகாத ஒலிம்பிக்காக நடைபெற்று முடியுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.