டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த ஒரு வாரமாக பல ஆச்சரியமான மற்றும் சுவாராஸ்யமான விஷயங்கள் நடைபெற்று உள்ளன. குறிப்பாக வெறும் 34ஆயிரம் பேரை கொண்ட ஒரு நாடு பதக்கம் வென்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மெரினோ என்ற நாடு தான் அது. அப்படி ஒரு நாடு சாதனைப் படைக்க மற்றொரு புறம் ஒரே வீராங்கனை 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 130 கோடிக்கும் மேல்  மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் நாம் இன்னும் இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்று இருக்கும்போது ஒரே வீராங்கனை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 7 பதக்கம் வென்று வியக்க வைத்துள்ளார். 


யார் அவர் ? எந்தெந்த பதக்கங்களை வென்றுள்ளார்? எந்தப் போட்டியில் பங்கேற்றார்?


ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேயின் நகரைச் சேர்ந்தவர் எம்மா மெக்கியான். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு வகை நீச்சல் போட்டிகளில் இவர் பங்கேற்றார். அதில் 50 மீ ஃப்ரீ ஸ்டைல், 100 மீ ஃப்ரீ ஸ்டைல், 4×100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 4×100 மீ மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றார். இவை தவிர 100 மீ பட்டர்ஃப்ளை, 4×200 மீ ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 4×100 மீ ரிலே ஆகிய பிரிவுகளில் வெண்கலம் வென்றார். இதனால் மொத்தமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கம், 3 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். 




இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்கள் வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மரியா கோராகோவிஸ்கயா 2 தங்கம் மற்றும்  5 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்திருந்தார். அதை தற்போது எம்மா மெக்கியான் சமன் செய்துள்ளார். 


 






அதேபோல் ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டில் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸிற்கு பிறகு அதிக பதக்கம்  வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் 2004 ஏதன்ஸ் மற்றும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் விளையாட்டில் 8 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார். மெக்கியானின் 4 தங்கப்பதக்கங்களால் நீச்சல் விளையாட்டில் இம்முறை ஆஸ்திரேலிய அணி 8 தங்கப்பதக்கம் வென்று வியக்க வைத்துள்ளது. அத்துடன் அமெரிக்க அணிக்கு நல்ல சவாலை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டில் நீண்ட காலங்களாக அமெரிக்க அணி தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. 


மேலும் படிக்க: