2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக,  உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் டோக்கியோவை நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். 


இந்த தருணத்தில், உலக சுகாதார மையத்தின் இயக்குனர், மருத்துவர். டெட்ரோஸ், ஒலிம்பிக் தொடர் நடைபெற்று முடியும் தருவாயில், கொரோனா பாதிப்பால் 1,00,000க்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ”கொரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம். இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழ்ந்துள்ளனர். இனியும் மக்கள் உயிரிழக்கக்கூடும்.” என அதிர்ச்சி அளித்துள்ளார். 


இந்நிலையில், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் 10,000 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு கடந்த மாதம் இறுதியில் அறிவித்திருந்தது. 






கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.


எனினும், கொரோனா பரவல் அதிகமானால், ரசிகர்கள் அனுமதிக்கப்படாத மைதானங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் எனவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் அரசு, டோக்கியோ அரசு, ஒலிம்பிக் தொடர் அமைப்பாளர்கள் குழு, சர்வதேச ஒலிம்பிக் குழு, பாரலிம்பிக் ஒலிம்பிக் குழு ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தினர்.



கொரோனா பரவலுக்கு மத்தியில், ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளதால், ஒலிம்பிக் தொடர் நடந்து முடியும் வரை, டோக்கியோ நகரத்தில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற முடிவை ஜப்பான் அரசு திரும்ப பெறும் என தெரிகிறது. இது குறித்து பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹே, “ஆகஸ்டு 22-ம் தேதி வரை, டோக்கியோவில் அவசரநிலை கடைபிடிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் 2021 தொடருக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.



ஒலிம்பிக் தொடர் நடைபெற இருந்தால், உலகெங்கிலும் இருந்து 10,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது சந்தேகம் அளிப்பதாக உள்ளது.


இந்தியாவில், பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு நடைபெற்று வந்த ஐபில் தொடர், கொரோனா பரவல் காரணமாக, வரலாற்றிலேயே முதல் முறையாக  இந்த ஆண்டு தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.  கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் நிலவுவதால், ஒலிம்பிக் போன்ற பிரமாண்டமான விளையாட்டு தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.