கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு கடும் தடுப்பாடு ஏற்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதித்த பலரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் அதிக அளவில் கட்டணங்களை நோயாளிகளிடம் இருந்து வசூலிப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சையை பெறலாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும் கட்டண கொள்ளையை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம், தனியார் மருத்துவமனை வசூலித்த 2 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மே மாதம் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இங்கு சில நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் இறந்துவிட்டார். ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு அளித்த சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக அந்த தனியார் மருத்துவமனை மீது மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை, மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ரஜினி விசாரித்தார்.
புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை வசூலித்த 2 லட்சத்து 3 ஆயிரத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து திரும்ப பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் நீதிபதி ரஜினி ஒப்படைத்தார். உடன் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா இருந்தார். இதுபோன்ற பொது பயன்பாட்டில் உள்ள சேவைக் குறைபாடுகள் குறித்து, நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் உரிய தீர்வுகளை இலவசமாகவும், விரைவாகவும் பெறலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !