காமன்வெல்த் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் 12 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் மகளர் குத்துச்சண்டை 70 கிலோ எடைப்பிரிவில் லோவ்லினா போர்கோயின் பங்கேற்க உள்ளார். இவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “மிகுந்த வேதனை மற்றும் வலியுடன் இந்தப் பதிவை நான் செய்கிறேன். நான் சில மாதங்களாக இந்திய குத்துச்சண்டை சம்மேளத்திடம் இருந்து ஒரு மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறேன். என்னுடைய இரண்டு பயிற்சியாளர்களையும் குத்துச்சண்டை சம்மேளனம் ஏற்கவேயில்லை. அவர்களிடம் பல முறை நான் முறையிட்டும் இது வேண்டும் என்றே ஏற்று கொள்ளபடவில்லை.
இதன்காரணமாக டோக்கியோவில் பதக்கம் வெல்ல எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் சந்தியா தற்போது என்னுடன் இல்லை. அவர் காமன்வெல்த் கிராமத்திற்கு வெளியே உள்ளார். என்னுடைய மற்றொரு பயிற்சியாளர் இந்தியா திருப்பி அனுப்பட்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் தொடங்க இருக்கும் இந்தச் சூழலில் நான் இப்படி ஒரு தொல்லையை அனுபவித்து வருகிறேன். இந்த அரசியல்களுக்கு எல்லாம் இடம் கொடுக்காமல் எப்படியாவது நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோளாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவை தொடர்ந்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒரு பதில் பதிவை செய்துள்ளது. அதில், “இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு லோவ்லினாவின் பயிற்சியாளருக்கு முறையான அங்கீகாரத்தை பெற்று தர கோரிக்கை விடுத்துள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளது.
குத்துச்சண்டை டூ டிஎஸ்பி:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் பங்கேற்றார். இந்த எடைப்பிரிவில் சிறப்பாக விளையாடிய லோவ்லினா பார்கோயின் வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியா வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லோவ்லினாவிற்கு பல்வேறு பரிசுகள் கிடைத்தன. குறிப்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ், லோவ்லினாவிற்கு 1 கோடி ரூபாய் பரிசை வழங்கினார். அத்துடன் லோவ்லினாவிற்கு டிஎஸ்பி பணியையும் வழங்கியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்