விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி, நடுச்சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம், பத்துவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களை சுற்றி வசிக்கும் மாணவ, மாணவிகள் புதுச்சூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் 16 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் அங்கு பயிலும் மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவது, தகாத வார்த்தைகளில் திட்டுவது என இருந்து வந்துள்ளார். மேலும் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக  தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாணவிகள் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தான் ஆசிரியர் தாமோதரனை கண்டித்து  பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குறிப்பாக ஆசிரியர் தாமோதரனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பள்ளி முன்பு அமர்ந்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். தகவல் அறிந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலீசார்    சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.




இதனிடையே இந்தப் பிரச்சினை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள், காவல்துறையினர் என பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவிப்பு வெளியிட்டார்.




மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரின் சாத்தூர் தாலுகா போலீசார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். ஆசிரியரை கைது செய்து அழைத்து வரும்போது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரை தாக்கமுற்பட்டனர். இதனையடுத்து சுதாரித்த போலீசார் பாதுகாப்புடன் ஆசிரியரை அழைத்துச் சென்றனர்.


பின்னர் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தாமோதரனிடம் காவல்துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.