Bhavani Devi: தேசிய விளையாட்டில் கேரள வீராங்கனையை வீழ்த்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான பவானி தேவி மீண்டும் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
3 நிமிடங்களில் தங்கம் வென்ற பவானி தேவி:
மகளிர் வாள்வீச்சில் சாப்ரே தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் கேரளாவைச் சேர்ந்த எஸ் சவுமியா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி ஆகியோர் மோதினர். போட்டியை வலுவாகத் தொடங்கிய சவுமியா அடுத்தடுத்து இரண்டு முறை, தனது வாளால் பவானி தேவியை தொட்டு இரண்டு புள்ளிகளை பெற்றார். இந்த புள்ளிகளை அவர் மிகவும் உற்சாகமாக கொண்டாடினார். ஆனால், முதலில் இரண்டு புள்ளிகளை இழந்ததும் சுதாரித்துக்கொண்ட பவானி அடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றதோடு, மூன்றே நிமிடங்களில் போட்டியையே முடித்தார். அதன்படி, 15-5 என்ற புள்ளி கணக்கில் சவுமியாவை வீழ்த்தி பவானி தேவி தங்கம் வென்றார்.
தங்கத்தை விட்டுக்கொடுக்காத பவானி தேவி:
இந்த வெற்றியின் மூலம், பவானி தேவி தனது தங்கப் பதக்கத்தை மீண்டும் தனதாக்கினார். மேலும், 37வது தேசிய விளையாட்டில் தமிழகத்திற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றார். 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் ஹாலில் வாள்வீச்சில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரில் பவானி தேவியும் ஒருவராவார்.
வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி:
இந்திய வாள்வீச்சு வீராங்கனைகளில் பவானி தேவி மிகவும் பிரபலமானவர் ஆவார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டில், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
வாள் வீச்சில் பதக்கம் வென்ற மற்ற வீரர்கள்:
ஆடவருக்கான ஃபாயில் ஃபென்சிங் பிரிவில் சர்வீசஸ் அணியின் அர்ஜுன் அர்ஜுன் தங்கம் வென்றார். பெண்களுக்கான இபிஇஇ வாள்வீச்சு போட்டியில் ஹரியானாவின் காத்ரி தனிக்ஷா தங்கமும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் தத்தா ஜோதிகா வெள்ளியும் கைப்பற்றினர்.
பதக்கப்பட்டியல்:
கோவாவில் நடைபெற்று வரும் 37வது தேசிய விளையாட்டில் மகாராஷ்டிரா 13 பதக்கங்களுடன் (3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சர்வீசஸ் (3 தங்கம், 2 வெள்ளி), கர்நாடகா (3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்) ஆகியவை தலா 5 பதக்கங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.