பாரிஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் 2023 இல் மார்டன் ஃபுசோவிக்ஸுக்கு எதிரான இரண்டாவது சுற்று ஆட்டத்தின் போது செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் மார்பில் ஒரு சிறிய, மர்மமான பொருள் இருப்பது பலரால் கவனிக்கபட்டது. இது விளையாட்டில் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் நானோ தொழில்நுட்ப சாதனம் என்று கூறப்படும் நிலையில், "எனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியம்" என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.


ஜோகோவிச் உடலில் சிப்


உடலில் சிப் செலுத்துவதை நாம் துப்பாக்கி திரைப்படத்தில் பார்த்திருப்போம், ஆனால் படம் வெளியாகி 10 ஆண்டு கழித்து, கொரோனா வந்த பிறகுதான் தெரிந்தது, விஜய் பயன்படுத்திய சாதனம், உடல் சூட்டை அளக்கும் மெஷின் என்றும் முருகதாஸ் நம்மை ஏமாற்றியுள்ளார் என்றும். ஆனால் தற்போது உண்மையிலேயே உடலில் சிப் ஒன்றை டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பொருத்தி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சிப் பற்றி கேட்டபோது ஜோகோவிச், "சிறுவயதில் நான் அயர்ன் மேனை மிகவும் விரும்பினேன், அதனால் நான் அயர்ன் மேனாக மாற செய்ய முயற்சிக்கிறேன்," என்று கேலி செய்தார், மேலும் "எனது குழுவே நம்பமுடியாத அளவுக்கு திறமையை வெளிப்படுத்த, இந்த நானோ தொழில்நுட்பம் எனக்கு உதவுகிறது, அது மிகப்பெரிய ரகசியம். அது இல்லையென்றால், நான் இப்போது இந்த இடத்தில் இருக்க மாட்டேன்," என்றார்.



எதற்காக இந்த டிவைஸ்


தாவோ டெக்னாலஜிஸ் என்ற இத்தாலிய நிறுவனம், "மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான புதுமையான நானோ தொழில்நுட்ப சாதனங்களை காப்புரிமை பெற்று உருவாக்குவதில்" நிபுணத்துவம் பெற்றுள்ளது, இதுவே ஜோகோவிச் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் பின்னாலும் இருப்பதாகக் கூறியுள்ளது. Taopatch என்பது காப்புரிமை பெற்ற நானோ தொழில்நுட்ப சாதனமாகும், இது உங்கள் உடலில் உள்ள வெப்பத்தை ஒளியாக மாற்றி அதனை, நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது என்று ஜோகோவிச் நெஞ்சில் சிப் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலான பிறகு, அந்த நிறுவனம் இந்த சாதனம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டது.


தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் 280 உயிர்கள் பறிபோன சோகம்.. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்


நிறுவனம் டுவீட்


"சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிச், நேற்று இரவு ரோலண்ட் கரோஸில், மார்டன் ஃபுசோவிக்ஸுக்கு எதிராக விளையாடினார். அப்போது அவர் நெஞ்சில் ஒரு சிப் இருப்பது தெரிந்தது," என்று டுவீட் செய்துள்ளது அந்த நிறுவனம். இது ஒரு பயனுள்ள நானோ தொழில்நுட்பம் என்றும், இது தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியம் என்றும் அவர் கூறியதாக, நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இந்த சாதனம் ஆடும் ஸ்டைல், சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் தடகள செயல்திறன் மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது. அதோடு மன அழுத்தம், பதட்டம் மற்றும் நாள்பட்ட வலி ஆகியவற்றைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.



இது எப்படி வேலை செய்கிறது?


"உங்கள் உடலில் இருந்து வெப்பத்தை ஒளியாக மாற்றும் நானோகிரிஸ்டல்கள் இதில் உள்ளன (இது இருட்டில் ஒளிரும்). இந்த ஒளி உங்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட குத்தூசி மருத்துவப் புள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது, இது உடலின் மற்ற பகுதிகளுடன் இயற்கையாக எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை உங்கள் உடல் "நினைவில் கொள்ள" உதவுகிறது. இது உடல்நலத்தில் சமநிலை மற்றும் சிறந்த தூக்கம், கவனம், தடகள செயல்திறன், வலி நிவாரணம் மற்றும் பலவற்றிற்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது," என்று நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.