உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக வலம் வருபர் நோவாக் ஜோகோவிச். செர்பியாவைச் சேர்ந்த இவருக்கு என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், உலகின் முக்கியமான கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா வந்த அவரின் விசா ரத்து இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாத காரணத்தாலே அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளதால், ஜோகாவிச்சால் இந்த தொடரில் பங்கேற்க இயலுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தொடரில் ஜோகோவிச் பங்கேற்காமல் விட்டால் பல அரிய வரலாற்று சாதனைகளை நிகழ்த்தும் வாய்ப்பு அவரது கையில் இருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகிலே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் என்ற அரிய சாதனையை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபேல் நடாலும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் தங்கள் வசம் வைத்துள்ளனர். அவர்களுடன் ஜோகோவிச்சும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முதலிடத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்த தொடரில் பங்கேற்று, ஆஸ்திரேலியா ஓபனை வென்றால் உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், விசா ரத்து செய்யப்பட்டதால் அந்த பொன்னான வாய்ப்பு ஜோகோவிச்சிடம் இருந்து பறிபோகியுள்ளது.
ஆஸ்திரேலியா ஓபன், ப்ரெஞ்ச் ஓபன், விம்ப்ள்டன் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் இந்த நான்கு தொடர்களே டென்னிஸ் உலகின் மிகப்பெரிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நான்கு தொடர்களும் நடைபெறும். இந்த நான்கு ஓபன் தொடர்களையும் வெல்லும் வீரரை காலண்டர் இயர் ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையைத் தட்டிச் செல்வார்.
கடந்தாண்டு ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்ப்ள்டன் ஓபன் வென்ற ஜோகோவிச் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து காலண்டர் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் அரிய வாய்ப்பை தவறவிட்டார். இந்த சாதனையை இதுவரை 5 வீரர்கள் மட்டுமே படைத்துள்ளனர். கடைசியாக 1988ம் ஆண்டு வீராங்கனை ஸ்டெபி கிராபி இந்த அரிய சாதனையை படைத்தார். அவருக்கு பிறகு34 ஆண்டுகளாக யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை.
ஆஸ்திரேலிய குடியுரிமை சட்டத்தின் கீழ் ஜோகோவிச்சிற்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவரால் அடுத்த 3 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது. இதனால், நடப்பாண்டில் ஆஸ்திரேலியா தொடரை வென்று காலண்டர் இயர் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் கணக்கை ஜோகோவிச் தொடங்குவதற்கான வாய்ப்பும் பறிபோகியுள்ளது.
தற்போது 34 வயதான ஜோகோவிச், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதாவது தனது 38வது வயதில் காலண்டர் கிராண்ட்ஸ்லாம் என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். மொத்தத்தில் இந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது அவரது டென்னிஸ் வாழ்க்கைக்கே ஒரு சறுக்கலாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்