கொரோனா தடுப்பூசி போடுவதைவிட கோப்பைகளை விட்டுக்கொடுப்பேன் எனக் கூறியுள்ளார் செர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவாக் ஜோக்கோவிச்.


கொரோனா தடுப்பூசி வேண்டாம்... இந்த ஒற்றைக் கருத்தை வைத்துதான் கனடாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர் டிரக் ஓட்டுநர்கள். அங்கு 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கிரீஸ், என ஆங்காங்கே தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்களே நடக்கின்றன.


ஆனால், உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கூறுவது, இந்த உலகம் ஒரு பெருந்தொற்றில் சிக்கியுள்ளது. இதிலிருந்து தப்ப ஒரே ஆயுதம் தடுப்பூசி. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் நோய்க் கிருமி உருமாறாலாம். உலகில் உள்ள ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கும் வரையில் உலகம் முழுவதும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அறிவுறுத்தி வருகிறது.


இது போன்ற சூழலில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் வீரரான நோவாக் ஜோகோவிச்சின் கருத்து திரும்பி பார்க்க வைத்துள்ளது. 


ஏற்கெனவே தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்பதாலேயே கடந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை விளையாட முடியாமல் நாடு திரும்பினார் ஜோகோவிச். இந்நிலையில் இப்போது மீண்டும் அவர் கூறியிருப்பது அவரது விளையாட்டு எதிர்காலத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாக இருக்கிறது.


“நான் கொரோனா தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் நான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளமாட்டேன். கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் இந்தந்த போட்டிகளில் விளையாட முடியாது என்று சொன்னார்கள் என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்குப் பதிலாக கோப்பைகளைத் துறப்பேன். இது தான் நான் கொடுக்கும் விலை. நான் கொரோனா தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை. யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் நான் செலுத்திக் கொள்ள மாட்டேன் என்றே கூறுகிறேன். சிறுவயதில் எனக்கு என் பெற்றோர் தடுப்பூசிகளை செலுத்தியிருக்கலாம். ஆனால் இப்போது நான் வளர்ந்த தனிநபர். தடுப்பூசிக்கு கட்டாயப்படுத்துவது எனது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது. அந்த சுதந்திரத்தில் யாரும் அத்துமீற முடியாது” என நோவாக் ஜோகோவிச் கூறியுள்ளார்.


ஆடவர் டென்னிஸ் உலகில் ரோஜர் ஃபெடரர்,ரஃபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் இந்த மூன்று பேர் ஆதிக்கம் செலுத்திய அளவிற்கு வேறு யாரும் செய்ததில்லை. அடுத்த மாதம் 40 வயதை எட்ட உள்ள ரோஜர் ஃபெடரர் தான் இவர்களில் மூத்தவர். இவர் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று தன்னுடைய 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.


அடுத்து உள்ள ரஃபேல் நடால் தன்னுடைய 34ஆவது வயதில் 2020 பிரஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று தன்னுடைய 20 கிராண்ட்ஸ்லாம் தொடரை வென்றார். இந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள நோவக் ஜோகோவிச் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருக்கிறார். இவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் 9, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 6, யுஎஸ் ஓபன் 3. இவற்றில் ஆஸி ஓபனில் தான் அதிக கிராண்ட்ஸ்லாம்களைக் குவித்துள்ளார்.