இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு இந்திய அணி சரியாக வீரர்கள் தேர்வு செய்யாதது ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்திய அணியின் தேர்வு குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து ஒரு விளையாட்டு தளம் ஒன்றுக்கு முகமது கைஃப் பேட்டியளித்துள்ளார். அதில், "விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் தேர்வில் ஒரு தெளிவு இல்லை.  அது தற்போது அணியில் இருக்கும் வீரர்களுக்கே நன்றாக தெரியும். அணியில் வீரர்களை தேர்வு செய்ய அவர்களின் முன்னாள் பெர்ஃபார்மென்ஸ்  கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை. அவர்களுடைய தற்போதைய ஃபார்ம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இதனால் யாருக்கும் இந்திய அணியில் நிலையான இடம் உண்டு என்று கூற முடியாது. வீரர்களின் தற்போதைய ஃபார்மை பார்த்து தேர்வு செய்வதையே விராட் கோலி ஒரு வாடிக்கையாக வைத்துள்ளார்.




ஆனால் கங்குலி கேப்டனாக இருந்த போது அவர் ஒரு வீரரை எடுத்தால் அவருக்கு நல்ல ஆதரவு தந்து சிறப்பாக விளையாட வைப்பார். அது தான் ஒரு நல்ல தலைவருக்கு அடையாளம். கங்குலியின் அந்த பண்பு விராட் கோலியிடம் இல்லை. ஆனால் கங்குலி காலத்தில் ஐபிஎல் போன்ற போட்டிகள் எல்லாம் இல்லை. ஆகவே அவர் எப்போதும் 20 முதல் 25 வீரர்களுக்குள் தான் இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய சூழல் இருந்தது.  தற்போது ஐபிஎல் போன்ற தொடர்கள் வந்தவுடன் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. எனவே விராட் கோலி இப்படி ஒரு முறையை கையாள்கிறார்.  இந்த முறையில் எந்த வீரருக்கும் பயம்தான் அதிகம் இருக்கும். அது அவர்கள் களத்தில் சரியாக விளையாடுவதை சற்று தடுக்கும். மேலும் இந்த முறையில் வீரர்கள் தேர்வு செய்வது சற்று கடினமான ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.




இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு பதவியேற்றார். கேப்டனாக பதவியேற்ற முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி வரிசையாக 38 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஒரே அணியுடன் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவே இல்லை. அந்த 38 போட்டிகளில் அணியில் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்து கொண்டே இருந்தார். இது அவருக்கு முன்பாக இருந்த தோனியின் கேப்டன்ஷிப்பில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக அமைந்தது. ஏனென்றால் தோனி அவரது தலைமையில் விளையாடும் அணியை அவ்வளவு எளிதாக மாற்றம் செய்யமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 'எல்லா நேரங்களில் முகக்கவசம் அணிய முடியாது' - ரிஷப்பை சப்போர்ட் செய்து பேசிய கங்குலி..!