அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். இந்த நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ்சோப்ராவிற்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, நாளை மறுநாள் தொடங்க உள்ள காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைத் தேடித்தந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் உலகளவில் தலைசிறந்த வீரர் ஆவார்.
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் வரும் 28-ந் தேதி( நாளை ) காமன்வெல்த் போட்டிகள் தொடங்க உள்ளது. உலகளவில் ஒலிம்பிக போட்டிக்கு பிறகு மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்த தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றால் கண்டிப்பாக இந்தியாவிற்கு பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் காயத்தால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஆகும்.
நடப்பு காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகள் பங்கேற்கின்றன. ஒலிம்பிக் போட்டியுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா அபாரமாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ்சோப்ரா காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் அவர் காயத்தால் விலகியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு வாய்ப்பை இழந்ததற்கும் நான் வேதனைப்படுகிறேன் என்று தங்கமகன் நீரஜ் சோப்ரா வருத்ததுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ எல்லோருக்கும் வணக்கம்,
பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நான் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்.
உலக சாம்பியன்ஷிப்பில் நான்காவது எறிதலின் போது என் இடுப்பில் ஏற்பட்ட பிடிப்பு பிறகு நான் அசௌகரியமாக உணர்ந்தேன். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழுவால் நேற்று மருத்துவரீதியாக ஆய்வு செய்ததில், ஒரு சிறிய காயம் கண்டறியப்பட்டது. மேலும் நான் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டேன்.
எனது ஆதரவுக் குழு மற்றும் IOA, AFI மற்றும் SAI இன் CAIMS ஆகியவற்றுடன் நான் இதைப் பற்றி விவாதித்தேன், மேலும் எனது நீண்ட கால இலக்குகளை மனதில் வைத்து, மேலும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவும், காயத்தின் தீவிரம் காரணமாகவும் காமன்வெல்த் போட்டியை தவிர்ப்பது சிறந்தது என்று நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்.
எனது பட்டத்தை பாதுகாக்க முடியாமல் போனதற்கும், தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு வாய்ப்பை இழந்ததற்கும் நான் வேதனைப்படுகிறேன். தொடக்க விழாவில் இந்திய அணியின் கொடி ஏந்தியவனாக இருக்கும் வாய்ப்பை இழந்ததற்காக நான் குறிப்பாக ஏமாற்றமடைந்தேன். இது ஒரு சில நாட்களில் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கௌரவமாகும்.
இப்போதைக்கு, எனது மறுவாழ்வில் கவனம் செலுத்துவேன். விரைவில் மீண்டும் செயல்படுவேன் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் வரும் வாரங்களில் பர்மிங்காமில் உள்ள எனது சக இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த என்னுடன் சேர உங்களை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்