2023 ஆசியக் கோப்பை போட்டியானது (நாளை) ஆகஸ்ட் 30ம் தேதி முதல் பாகிஸ்தானில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி விளையாடுகிறது.
ஆசியக் கோப்பைக்கு தயாராகும் வகையில் கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் இந்திய வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கே.எல்.ராகுல் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றது முதலே விவாத பொருளாகவே இருந்து வருகிறது. முழு உடற்தகுதி இல்லாத ஒருவரை எவ்வாறு இந்திய அணியில் எடுக்கலாம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு காரணம், கே.எல்.ராகுல் இன்னும் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும், வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் என இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இருப்பினும், இதற்கிடையில் கே.எல்.ராகுல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்யும் பல வீடியோக்களும் வெளிவந்தன. தற்போது இவரின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், கே.எல். ராகுல் அபாரமான சிக்ஸர் அடிப்பது வைரலாகி வருகிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் உடற்தகுதி..?
தனியார் ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையில், “ ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் பெங்களூருவில் நடைபெற்ற உடற்தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கே.எல்.ராகுல் குறித்த முடிவு போட்டியின்போதே தெரிவிக்கப்படும். ஆனால், அவர் பயிற்சியில் சிறப்பாகவே செயல்பட்டார். இன்னும் அவர் 100% ஃபிட்டாக இல்லை. போட்டிக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. அவர் ஃபிட்டாக இருப்பார் என்று நம்புகிறோம், ஆனால் அவர் ஃபிட் ஆகவில்லை என்றால் பேக்கப்பாக இஷான் கிஷன் இருக்கிறார்.” என தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன், பெங்களூருவில் இந்திய அணி 6 நாள் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த முகாமில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே ஆசிய கோப்பை அணியில் இடம்பிடித்ததால் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.