ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை ஹரியானாவில் உள்ள தனது வீட்டிற்கு விருந்துக்காக அழைக்க போவதாக தெரிவித்துள்ளார். 


இந்தியாவின் ‘தங்க மகன்’ என்று பெயர் எடுத்துள்ள நீரஜ் சோப்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலக தடகள சாம்பியன்சிப் போட்டியில் வெற்றிபெற்று தங்க பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் சூரிச் நகரில் நடந்த டயமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 85, 71 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார். 


இந்தநிலையில், இந்த போட்டியில் வெள்ளி வென்றதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ராவிட் பாகிஸ்தான் வீரரான நதீமை வீட்டுக்கு அழைக்க போகிறீர்களா..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நீரஜ் சோப்ரா, “உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் என்னுடன் போட்டியிட்ட அனைத்து போட்டியாளர்களையும் விருந்திற்கு அழைப்பேன். அதில், பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீமும் வர வேண்டும் என்பது என் விருப்பம். விருந்தோம்பல் நமது பாரம்பரிய முறை. நம்முடைய கலாசாரத்தில் வீட்டிற்கு வந்தவர்களை உணவு அளித்தல் சிறந்த பழக்கம். ” என்றார். 


அனைத்து விளையாட்டு வீரர்களும் பங்கேற்கக்கூடிய உலகத் தரம் வாய்ந்த டிராக் அண்ட் ஃபீல்ட் போட்டி இந்தியாவில் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போட்டிக்கு வரும் வெளிநாட்டு வீரர்களையே நீரஜ் சோப்ரா தனது வீட்டிற்கு அழைக்கபோவதாக தெரிவித்திருந்தார். 


நீரஜ் சோப்ரா - அர்ஷத் நதீம் இடையிலான நட்பு:


நீரஜ் சோப்ரா ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். 






நீரஜ் மற்றும் நதீமின் நட்பு 2016ம் ஆண்டு குவஹாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் இருந்து தொடர்ந்து வருகிறது. இங்குதான் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடின. அதை தொடர்ந்து, ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் தங்கமும், நதீம் வெண்கலமும் வென்று ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். 






முன்னதாக, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அர்ஷத் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பேசிய நீரஜ், அர்ஷத் தனது நாட்டிற்காக மிகபெரிய சாதனை படைத்துள்ளார். அவர் இத்தகைய சாதனையை படைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். 


நீரஜின் அடுத்த போட்டிகள்: 


நீரஜ் சோப்ரா அடுத்ததாக யூஜினில் நடக்கும் டயமண்ட் லீக் இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார்.  ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அதாவது கடந்த ஒரு வாரத்தில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நீரஜ், அடுத்த ஒரு மாதத்தில் நிறைய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 


அதன்படி, அடுத்ததாக நீரஜ் அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் நடைபெறும் போட்டியிலும், தொடர்ந்து சீனாவில் உள்ள ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கிறார்.