டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
யூஜினில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய ஜாம்பவான் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன்மூலம், நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். செக் குடியரசின் ஜக்குப் வாட்லெச் 84.27 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை பெற்று டயமண்ட் லீக் கோப்பையை வென்றார்.
சொதப்பிய நீரஜ் சோப்ரா..
இறுதிப்போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தான் வீசிய ஆறு முயற்சிகளில் இரண்டு முயற்சிகளில் தவறு செய்தார். செக் குடியரசை சேர்ந்த ஜக்கப் வாட்லெச்தனது முதல் த்ரோவில் இருந்தே முன்னிலையை தக்க வைத்துக் கொண்டார். அவரது முதல் முயற்சியாக 84.01 மீட்டர்கள் பதிவானது.
நீரஜ் சோப்ரா இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தால், டயமண்ட் லீக் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக கைப்பற்றிய மூன்றாவது ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார். இவருக்கு முன்னதாக, செக் குடியரசின் விட்டெஸ்லாவ் வெஸ்லி (2012 மற்றும் 2013), ஜக்குப் வாட்லெச் (2016 மற்றும் 2017) ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் நீரஜ் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறிந்த தூரம்:
- முதல் முயற்சி - தவறு
- இரண்டாவது முயற்சி - 83.80 மீட்டர்
- மூன்றாவது முயற்சி - 81.37 மீட்டர்
- நான்காவது முயற்சி - தவறு
- ஐந்தாவது முயற்சி - 80.74 மீட்டர்
- ஆறாவது முயற்சி - 80.90 மீட்டர்
இறுதிப் போட்டியில் எந்த வீரர் ஈட்டியை எவ்வளவு தூரம் எறிந்தனர்?
- ஜக்குப் வாட்லெக் (செக் குடியரசு)- 84.24 மீ
- நீரஜ் சோப்ரா (இந்தியா) - 83.80 மீட்டர்
- ஆலிவர் ஹெலாண்டர் (பின்லாந்து) - 83.74 மீட்டர்
- ஆண்ட்ரியன் மர்தாரே (மால்டோவா)- 81.79 மீட்டர்
- கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா)- 77.01 மீ
இறுதிப்போட்டிக்கு எப்படி தகுதி பெற்றார் நீரஜ்..?
டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டிக்கு மொத்தம் ஆறு வீரர்கள் தகுதி பெற்றிருந்தனர்.
தோஹா டயமண்ட் லீக்கில் நீரஜ் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடத்தையும், அதனை தொடர்ந்து, லொசேன் டயமண்ட் லீக்கில் 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார். தொடர்ச்சியாக நீரஜ் சோப்ரா காயம் காரணமாக மொனாக்கோ லெக் தொடரை இழந்தநிலையில், கடந்த சூரிச் டயமண்ட் லீக்கில், நீரஜ் 85.71மீட்டர் எறிந்து முதல் இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா மொத்தம் 23 புள்ளிகளுடன் டயமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
டயமண்ட் லீக்கின் ஒரு லெக்கில் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் முதல் இடத்தைப் பிடித்ததற்கு 8 புள்ளிகளும், இரண்டாவது இடத்தைப் பிடித்ததற்கு 7 புள்ளிகளும்மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்கு 6 புள்ளிகளும், நான்காவது இடத்தைப் பிடித்தால் 5 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.