வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் இன்று ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.


வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இன்று நடைபெறும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய மொபைல் செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். இந்த செயலியில் திமுக அரசின் செயல்பாடுகள், ஒவ்வொரு தொகுதியை பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் மற்றும் திராவிட தத்துவம் சார்ந்த தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வேலூரில் இன்று திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த பவளவிழாவானது ஆனைகட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காடனேரி பைபாஸ் ரோடு அருகே நடைபெறுகிறது. 


’மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியானது அண்ணாதுரையின் தொலைநோக்குப் பார்வையுடன் அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு எளிதில் சென்றடைய செய்ய இந்த செயலி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து தெரிந்துகொள்வதற்கு வசதியாக இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மக்களுடன் ஸ்டாலின்’ செயலியின் விவரம்: 


’மக்களுடன் ஸ்டாலின்’  செயலியானது தமிழ்நாட்டில் அரசு தொடர்பான தகவல் மற்றும் சேவைகளை எளிதாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் போன்ற பொதுமக்களுக்கு தொடர்புடைய திட்டங்களை கண்டறிய உதவுவதன் மூலம், அரசாங்கத் திட்டங்கள் மற்றும் தொகுதி சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 






மேலும், இந்த செயலி மூலம் பயனர்கள் முதலமைச்சர், எம்.ஏல்.ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்களிடம் கேள்விகளை கேட்கலாம் என்றும், பயனர்கள் தங்கள் தொகுதி சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை பகிரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கள செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும்... 


முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு சென்றடைந்தார். இன்று மேல்மொனவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 


வேலூர் அடுத்த கந்தனேரியில் சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கோட்டை வடிவிலான பிரமாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மாலை முப்பெரும் விழா மற்றும்  பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா உரையாற்ற இருக்கிறார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருவதை தொடர்ந்து வேலூர் பகுதியில் இன்று ட்ரோன்கள் மற்றும் பெரிய பலூன்கள் பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பலத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.