தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியானது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது. லீக் சுற்றுகளில் அடிப்படையில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். நேற்று முன் தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில், தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசியாக தமிழ்நாடு அணி கடந்த 2017-18ம் ஆண்டு கோப்பையை வென்றது. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றதால், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.7.2023) தலைமைச் செயலகத்தில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அம்ரிஸ்தரில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடிய தமிழ்நாடு அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் 26.6.2023 அன்று நடைபெற்ற இரயில்வே அணிக்கு எதிரான அரையிறுதியில், தமிழ்நாடு அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 28.6.2023 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி. என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா.எம்.பவித்ரா, பி.துரிகா, எஸ்.சண்முகப்பிரியா. எம்.சுபாஷிணி. எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி. எம்.மாளவிகா, எம்.நந்தினி. ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர், வினோதினி. எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா. பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி. என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் திருமதி. எஸ். கோகிலா மற்றும் திருமதி வி. கலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டியில் முதலிடம் பெற்று தங்க கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்றைய தினம் சந்தித்து வாழ்த்துப் பெற்று அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.