36வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் குஜராத் மாநிலம் சார்பில் 10 வயது சிறுவன் ஒருவர் களமிறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் யார் இந்த சிறுவன்? அவன் கடந்து வந்த பாதை என்ன?
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஷௌரியாஜித் கைரே. இவருக்கு 6 வயதாக இருக்கும் போது மல்லர் கம்பம் விளையாட்டை இவருடைய தந்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது இந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பாட்டு ஷௌரியாஜித் தொடங்கியுள்ளார். முதலில் அவர் நிறையே சிரமங்களை சந்தித்துள்ளார். அதாவது அவருடைய உயரம் மிகவும் குறைவாக இருந்ததால் கம்பத்தில் ஏறி இவரால் பயிற்சி செய்வது கடினமாக அமைந்துள்ளது.
அதன்பின்னர் மெல்ல முயற்சி செய்து கம்பத்தின் மீது ஏறி பயிற்சியை சிறப்பாக செய்துள்ளார். அதன்பின்னர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார். தன்னைவிட வயதில் மூத்த வீரர்களுக்கு இவர் நல்ல போட்டியை தந்தார். இதன்காரணமாக குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளுக்கு இவர் தயாராகி வந்தார்.
இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இவருடைய தந்தை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தந்தையின் இழப்பு காரணமாக தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை இவர் எடுத்துள்ளார். அப்போது இவருடைய தாய் மற்றும் பயிற்சியாளர் இதில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் இவர் பங்கேற்க முடிவு எடுத்துள்ளார். அவருடைய தந்தையின் ஆசையையும் நிறைவேற்றும் முனைப்பில் உள்ளார். இவருடைய தந்தை தன்னுடைய கடைசி ஆசையாக தன் மகன் தேசிய போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அவருடைய ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று ஷௌரியாஜித் உறுதியளித்துள்ளார்.
தேசிய போட்டியில் மல்லர் கம்பம் பிரிவில் முதல் சுற்றில் சிறுவன் ஷௌரியாஜித் பங்கேற்ற வீடியோ வேகமாக வைரலானது. இதைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தன்னுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்ற களமிறங்கியுள்ள சிறுவன் ஷௌரியாஜித்தை நாமும் வாழ்த்துவோம். தேசிய விளையாட்டு போட்டிகளில் மல்லர் கம்பம் பிரிவில் இன்னும் இரண்டு சுற்றுகள் மிச்சம் உள்ளன. அதில் சிறப்பாக செயல்பட்டு இவர் பதக்கம் வெல்லுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.